உள்ளூர் செய்திகள்

வாலிபரை அடித்து கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2023-02-19 15:16 IST   |   Update On 2023-02-19 15:16:00 IST
  • 3 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
  • நண்பர்கள் 2 பேரும் மஞ்சுநாதனை கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த தீதையாளன் என்பவரது மகன் மஞ்சுநாதன் (வயது 29) என்பதும், தனது தாயாருடன் வசித்து வந்த அவர், பிரபல வணிக நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார், மஞ்சுநாத்தின் நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த பிரபு (23), மார்க்ஸ் (31) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மஞ்சுநாதன் ரூ.3 ஆயிரம் நண்பர்களுக்கு கொடுக்க வேண்டி இருந்ததும், சம்பவத்தன்று அவர்கள் 3 பேரும் ஒன்றாக மது அருந்தியபோது, இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2 பேரும் மஞ்சுநாதனை கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பிரபு, மார்க்ஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News