செய்திகள்

8 வழி சாலைக்கு ஆதரவு- ரஜினிக்கு அ.தி.மு.க. நாளேடு பாராட்டு

Published On 2018-07-17 09:49 IST   |   Update On 2018-07-17 09:49:00 IST
8 வழி சாலை திட்டத்துக்கு ஆதரவு அளித்த ரஜினிக்கு அ.தி.மு.க.வின் நாளேடான புரட்சித் தலைவி நமது அம்மா பாராட்டு தெரிவித்து உள்ளது. #ADMK #Rajinikanth
சென்னை:

எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் “நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டம்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்.

மேலும் கழக அரசின் கல்விப் புரட்சியையும் அவர் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார். இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

உச்சி வெயில் அடித்தாலும், ஓங்கி மழை கொட்டினாலும், அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிதான் என்று எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிற உள்நோக்கம் கொண்ட சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைகல்லாக நின்று உரசிப் பார்த்து வரவேற்று இருப்பது பாராட்டுக்குரியது.


ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர விவகாரத்திலும், அரசின் மீது அபாண்ட பழிபோட்டு அரசியல் லாபம் தேட தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெறிகொண்டு அலைந்த நிலையில் அப்போதும் ரஜினிகாந்த் களத்தின் உண்மையை உள்வாங்கி நிஜத்தையே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவிரி உரிமையை வென்றெடுத்தது, ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்று வைத்தது, ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு விடை கொடுத்தது, பிளாஸ்டிக் அரக்கனுக்கு தடை போட்டது, நீர் நிலைகளை தூர் வாரியது, நீராபானம் கொண்டு வந்தது, சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் சமரசம் கொள்ளாமல், ரவுடிகளை வேட்டையாடி, அமைதியை நிலைநாட்டுவது என்றெல்லாம் திடமாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் எடப்பாடி பழனிசாமி அரசின் தூய்மையான தொண்டுள்ளத்திற்கு இது போன்ற உச்ச நடிகர்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே.... வரவேற்போம்... வாழ்த்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Rajinikanth
Tags:    

Similar News