செய்திகள்

அமைச்சர்கள் ஊழல் செய்திருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்து நிரூபியுங்கள்: பாஜக-வுக்கு தம்பிதுரை பதில்

Published On 2018-07-14 10:43 IST   |   Update On 2018-07-14 10:43:00 IST
தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்திருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்து நிரூபிக்கலாம் என்று பாரதிய ஜனதாவுக்கு தம்பிதுரை பதில் அளித்துள்ளார்.#ADMK #ThambiDurai #BJP
கரூர்:

கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க தமிழகத்தில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசுதான் பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தை கொண்டு வராமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததை பெருமையாக பேசி வருகின்றனர். அதனை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் இதனை செயல்படுத்துவதாக கூட எடுத்து கொள்ளலாம்.

பிரதமர் நரேந்திரமோடி எங்கள் நண்பர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் ஆட்சியை பற்றி குறை சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டோம். தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதனை தடுக்க ஏதேனும் இதுவரை முயற்சி செய்துள்ளாரா? இவை அனைத்தும் அ.தி.மு.க. அரசை குறை கூறும் நோக்கில் கூறப்படும் பொய் குற்றச்சாட்டுகள். ஆதாரம் இருந்தால் பொன். ராதாகிருஷ்ணன் நிரூபிக்கட்டும்.


சென்னை வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்து இருப்பதாக கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய பா.ஜ.க. இதுவரை எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேல்முறையீடு செய்ய பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் நடந்த ஊழல்களில் எதற்கான தீர்வை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். லோக் ஆயுக்தாவில் பா.ஜ.க.வினர் புகார் தெரிவிக்கலாம். எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 20 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை ஏற்புடையது அல்ல. தமிழக கலாச்சாரத்திற்கு இந்த கொள்கை ஒத்துவராது. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தி.மு.க. தான் கோர்ட்டுக்கு சென்றது. அதற்காக உள்ளாட்சி நிதி ரூ.2ஆயிரம் கோடியை பெற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தம்பிதுரையிடம் நிருபர்கள், அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தீபா யார்? அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.

பேட்டியின் போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,கீதா எம்.எல்.ஏ. உடனிருந்தனர். #ADMK #ThambiDurai
Tags:    

Similar News