செய்திகள்

காங்கிரசை விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து நானும் பேசுவேன்- திருநாவுக்கரசர்

Published On 2018-07-10 08:30 GMT   |   Update On 2018-07-10 08:30 GMT
காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து தானும் பேசுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
ஆலந்தூர்:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

1967-லேயே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 1991-ல் காங்கிரசுடன் கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜீவ் காந்தி உயிர்தியாகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சர் ஆனார்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வுக்கு, ஜெயலலிதாவுடன் சேர்த்து சமாதி கட்டி விட்டார்கள். தற்போது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி, நிழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. பா.ஜனதாவை சந்தோ‌ஷப்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரும், அ.தி.மு.க.வினரும் காங்கிரசை விமர்சிக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். எனவே, இனி பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது என்று கருதுகிறேன்.

தமிழ்நாட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அதிக நிதி கொடுத்து இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். இது வெறும் ஏட்டளவில் உள்ள புள்ளி விவரம் தான். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் எந்த பெரிய தொழிற்சாலைகளும் வரவில்லை. நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.


தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை.

அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து நான் பேசுவேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
Tags:    

Similar News