செய்திகள்

நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் ஏற்கமாட்டோம்- தம்பிதுரை

Published On 2018-07-08 12:13 IST   |   Update On 2018-07-08 12:13:00 IST
நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுகொள்ளமாட்டோம் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #NEET
கரூர்:

கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது :-

தமிழகத்தில் 2021ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. 5ஆண்டுக்குத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அவர்களுக்கு செய்யவேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அதனால்தான் 2019 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு கொள்கை ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

2024 முதல் பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒருங்கிணைந்த தேர்தல் என்று முடிவெடுத்தால், முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவித்து, அதற்கு அனைவரும் உடன்பட்டால் நாங்களும் உடன்படுவோம். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இடைத்தேர்தலே இருக்கக்கூடாது என்பதுதான்.


நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம். நீட் தேவையில்லை என்பதுதான் எங்களது கொள்கை முடிவு. அதில் நாங்கள் வெற்றி பெறுவோமா? தோல்வி அடைவோமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் மாணவர்களை திசை திருப்ப விரும்பவில்லை.

அனைத்து வி‌ஷயங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறுவது தவறு. ஜி.எஸ்.டி. விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பும் செய்துள்ளோம். இது போல் பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். தமிழ் உணர்வு, தமிழர் உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #NEET #ThambiDurai
Tags:    

Similar News