செய்திகள்

கமலுடன் தினகரன் அணி கூட்டணியா? தங்கதமிழ்செல்வன் பதில்

Published On 2018-05-21 06:18 GMT   |   Update On 2018-05-21 06:20 GMT
நடிகர் கமல்ஹாசனுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைப்பது குறித்து காலம் முடிவு செய்யும் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். #TTVDhinakaran #ThangaTamilSelvan #KamalHaasan

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆறுதல் கூறினார். அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடைக்கானலில் நடந்த கோடை விழாவின் போது அமைச்சர் சீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து வணங்கியுள்ளார். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முதுகெலும்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக யார் காலில் விழுவதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக முதல்வரும், துணை முதல்வரும் பேசியுள்ளனர்.

மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக நலன்களை அடகு வைக்கவும் துணிந்து விட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அக்கறை கிடையாது.

ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பிடிப்பார் என்று உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாம். சமுக வலைதளங்களில் பரவும் செய்திகளை வைத்து யாரும் கனவு காண முடியாது. டி.டி.வி. தினகரன் முதல்வர் ஆவார் என்று முன்பே சமூக வலைதளங்களில் வெளியானது.


ஆனால் அதனை நாங்கள் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் தீவிரம் காட்டியதால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் அமோக வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றி மேலும் தொடரும். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்து உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்களுக்கு நிரூபிப்போம்.

நடிகர் கமல்ஹாசனின் விவசாயிகள் கோரிக்கை குறித்த மாநாட்டில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார். இந்த கூட்டணி தொடருமா? என்று இப்போது சொல்ல முடியாது. மக்கள் நலன் காக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் கூட்டணியில் அவரும் நாங்களும் எதிர்காலத்தில் இணைந்தாலும் வியப்பில்லை.

கோவா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறைந்த இடங்களை பிடித்த போதும் பா.ஜ.க. தனது அரசை அம்மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்தியது. ஆனால் கர்நாடகாவில் அவர்களது சூழ்ச்சியை முறியடித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை பிடித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை காவிரி தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதமாக கூறி வந்தனர். தற்போது மீண்டும் அந்த கூட்டணிதான் ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளபடி ஆணையத்தை விரைவாக அமைத்து காவிரி நீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #ThangaTamilSelvan #KamalHaasan

Tags:    

Similar News