செய்திகள்
கல்லணையில் இன்று நடந்த ஹோமத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட போது எடுத்த படம்.

தமிழகத்துக்கு இனிமேல் காவிரி தண்ணீர் கிடைக்கும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-05-15 11:51 IST   |   Update On 2018-05-15 11:51:00 IST
கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதால் தமிழகத்துக்கு இனிமேல் காவிரி தண்ணீர் கிடைக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #KarnatakaElection2018 #cauveryissue
பூதலூர்:

பா.ஜனதா சார்பில் டெல்டா மாவட்டங்களில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி நாளை நடக்கிறது. இந்த பேரணி தஞ்சை மாவட்டம் கல்லணையில் நாளை தொடங்குகிறது.

பா.ஜனதாவின் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி சிறப்பாக அமைய வேண்டி அமாவாசை நாளான இன்று கல்லணையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் பல கருத்துக்களை தெரிவித்து தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன. இதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா சைக்கிள் பேரணி நாளை தொடங்குகிறது.

காவிரியில் தண்ணீர் பெருக வேண்டியும், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வளம் கொழிக்கவும் வேண்டி கல்லணையில் இன்று சிறப்பு ஹோமம் செய்துள்ளோம்.

இந்த நேரத்தில் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி இனி 5 ஆண்டுகள் இருக்கும். இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் இனி கிடைக்கும். இதனால் தமிழகத்துக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நடிகர் கமல் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான முடிவை பா.ஜனதா தலைமை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லணையில் நாளை தொடங்கும் உழவன் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்கு மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைக்கிறார். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பேரணி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி தஞ்சையில் முடிவடைகிறது.

திருவையாறில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். #BJP #PonRadhakrishnan #KarnatakaElection2018 #cauveryissue
Tags:    

Similar News