செய்திகள்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரை சந்தித்தேன்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-05-14 05:00 GMT   |   Update On 2018-05-14 05:00 GMT
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரை சந்தித்தேன் என்று விழுப்புரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #SVeShekher #BJP #PonRadhakrishnan
விழுப்புரம்:

நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் தனது பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளர் குறித்து தவறாக சித்தரித்து கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதையொட்டி அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். கைது நடவடிக்கைக்கு பயந்து எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டார். அவர் தலைமறைவாகி 24 நாட்கள் ஆகிறது.

இந்நிலையில் சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பதுபோல் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் விழுப்புரத்துக்கு இன்று காலை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் எஸ்.வி.சேகரை சந்தித்தீர்களா? அவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லையே என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-


நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றேன். அப்போது எஸ்.வி.சேகர் வெளியே வந்தார். அப்போது அவர் என்னை பார்த்து கும்பிட்டார்.

எஸ்.வி.சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று போலீசாரிடம் கேளுங்கள்.

கேள்வி:- ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என கூறப்படுகிறதே?

பதில்:- பாரதிய ஜனதா எந்தவித கட்சியுடனும் கூட்டணிக்காக ஏங்கவில்லை.

கேள்வி:- கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்படுமா?

பதில்:-கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #SVeShekher #BJP #PonRadhakrishnan
Tags:    

Similar News