செய்திகள்

அ.தி.மு.க. இரு அணி இணைப்பு: ஓ.பன்னீர்செல்வம்தான் முடிவு எடுக்க வேண்டும்- தம்பிதுரை

Published On 2017-08-12 14:05 IST   |   Update On 2017-08-12 14:05:00 IST
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம்தான் முடிவு எடுக்க வேண்டும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

டெல்லியில் இருந்து நேற்று இரவு வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நானும், முதல்-அமைச்சரும் பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினோம். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினோம். அதற்கு பிரதமர் ஆவண செய்வதாக கூறி உள்ளார். அதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

நீட் தேர்வு முடிந்து போன பிரச்சனை. தற்போது மாணவர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும். சட்ட விதிகளுக்குட்பட்டு மாணவர்களை சேர்க்க பிரதமர் ஆலோசித்து வருகிறார்.

தமிழக சட்டசபையில் இரண்டு முறை நீட் தேர்வில் விலக்கு கோரிய தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களின் ஆய்வில் இருக்கிறது. அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், பாதி அளவு நாங்கள் வந்து விட்டதாக கூறி உள்ளார். அவருக்கே நாங்கள் பாதி அளவு வந்து விட்டது தெரிகிறது. மீதி பாதி அளவில் அவர்கள்தான் வர வேண்டும்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை பற்றி ஆட்சியாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நான் எதுவும் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News