செய்திகள்

தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற அதிகாரி பெயரை தெரிவிக்க வேண்டும்: திருநாவுக்கரர் பேட்டி

Published On 2017-04-30 19:30 IST   |   Update On 2017-04-30 19:30:00 IST
இரட்டை இலை சின்னம் பெற தினகரன் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார். யாருக்கு கொடுக்க முயன்றார்? அதிகாரி யார் என்பதை தெரியபடுத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உப்பு சத்தியாகிரக 87-ம் ஆண்டு நினைவு நாளையெட்டி அங்குள்ள நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நூற்றுக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்புசத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து ஊர்வலமாக அகஸ்தியன் பள்ளிக்கு சென்றனர்.

அவர்கள் தேசப்பக்தி பாடல்களையும் வந்தே மாதரம் கோ‌ஷத்தையும் முழங்கி சென்றனர். பின்பு அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் உப்பு அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரன் மீதான விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். ஒரு கட்சியை பிரிக்கவோ, சேர்க்கவோ அச்சுறுத்தலாக இருக்க கூடாது.


பாரதீய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் விபத்தில் சிக்கி கொள்ளும். நான் அ.தி.மு.க. வுக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவாளன் அல்ல.

இரட்டை இலை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அவர் யாருக்கு பணம் கொடுக்க முயன்றார்? அந்த அதிகாரி யார்? என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினையில் மாறுபட்ட கருத்து உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.

முதலில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி விட்டு தற்போது தற்கொலை செய்யவில்லை என கூறுகிறார்கள்.

தேர்தல் வரும் போது எல்லா கட்சிகளும் கூட்டணி சேரும். அது போல் காங்கிரசும் கூட்டணி சேரும். கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் காங்கிரசார் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன், சர்தார் வேதரெத்தினத்தின் பேரன்கள் வேதரெத்தினம், கேடிலியப்பன் மற்றும் உப்பு சத்தியாகிரக நினைவு கமிட்டி பொதுச் செயலாளர் சக்தி.செல்வகணபதி துணைத் தலைவர் சண்முகவடிவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் போஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வந்தே மாதரம் கோ‌ஷங்களை எழுப்பி உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News