லைஃப்ஸ்டைல்

விடாமுயற்சி வெற்றிக்கு திறவுகோல்

Published On 2019-05-20 03:15 GMT   |   Update On 2019-05-20 03:15 GMT
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்ப திரும்ப விடா முயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும். எந்தக் காரியமுமே தொடங்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடப்பதற்கு முன்பு விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றனர்.

கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது. புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கை மண்அளவுதான் என்று புத்தகங்களை படிக்க படிக்க புரியும்.

ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள். அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் புகழ் பெறுவதற்கு முன்பு எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளை தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், “வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான் அவசியம். நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்” என்கிறார்.

ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே. தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு. ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே. இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.

பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியே அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக மேடம் கியூரி, மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அகிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது. உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது.

அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள். சாதனை படைத்தார்கள். இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது. திருவள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்று.

நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
Tags:    

Similar News