லைஃப்ஸ்டைல்

வீட்டு மனை வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

Published On 2019-05-18 02:37 GMT   |   Update On 2019-05-18 02:37 GMT
வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு, ஒழுங்குமுறை சட்டம் 1976-ல் அமலுக்கு வந்து, 1978-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 500 சதுர மீட்டருக்கும் அதிகமாக நகர்ப்புற நிலம் வைத்துள்ள எந்த ஒரு தனி நபரும், உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் நிலத்தை விற்பனை செய்ய அனுமதியில்லை. அதனால், வீட்டு மனை வாங்கும்போது அந்த நிலம் நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதை அறிந்து செயல்படுவதே பாதுகாப்பானது.

கடந்த 1983-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான ஏக்கர் அளவில் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டு, கிட்டத்தட்ட 70 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவற்றில் 48 லட்சம் ஏக்கருக்கும் மேல் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நில உச்ச வரம்பு சட்டத்தில், நிலங்கள் நன்செய் மற்றும் புன்செய் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நகர்ப்புற நில உச்சவரம்பு

வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், நகர்ப்புற நிலங்களை முறைப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது ஆகியவை நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தின் நோக்கம் ஆகும். தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம், 1961 (Tamilnadu Land Reforms Fixation of Ceiling on Land Act, 1961 ) இந்திய நாடாளுமன்றம் மூலம் 1964-ம் ஆண்டு ஜூன் 20 நாளன்று 1966-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் உள்ளடக்கியதாக கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தை செயலாக்குவதில், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகள் குறித்த முறையீடுகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் ஆகியவை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், 1978-ம் ஆண்டில் நகர்ப்பகுதி நில உச்ச வரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை அரசு இயற்றியது. இச்சட்டம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது.

கவனிக்க வேண்டிய குறிப்புகள்

* ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்படாத குடும்பத்திற்கான நில உச்சவரம்பானது 15 தரநிலை ( Standard Acres ) ஏக்கர்களாகும்.

* ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்பட்டிருக்கும் குடும்பத்தினர்களின் நில உச்சவரம்பு, 15 தரநிலை ஏக்கர்களும், கூடுதலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தரநிலை ஏக்கர்களும் ஆகும்.

* எக்காரணம் கொண்டும் மொத்த உச்ச அளவு 30 தரநிலை ஏக்கர்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* குடும்பத்து பெண் உறுப்பினர் கொண்டிருக்கும் சீதன நிலத்துடன் சேர்த்து குடும்பம் கொண்டிருக்கும் மற்ற நிலத்தையும் சேர்த்து 15 தரநிலை ஏக்கர்களுக்கு மேற்பட்டிருந்தால், பெண் உறுப்பினர் 10 தரநிலை ஏக்கர்களுக்கு மிகைபடாமல் சீதன நிலத்தை வைத்திருக்கும் உரிமை உண்டு.

* இடம் அல்லது மனை நில உச்ச வரம்பு சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால், சம்பந்தப்பட்ட கிராம கணக்கில் ULT (Urban Land Tax) என்ற குறிப்பு இருக்கும். மேலும், அது சம்மந்தமாக வழக்கு ஏதாவது இருந்தால் நீதிமன்ற ஆணை எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Tags:    

Similar News