பெண்கள் உலகம்

உறவுகளும் சரிவுகளும்

Published On 2018-09-27 08:26 IST   |   Update On 2018-09-27 08:26:00 IST
முன்பெல்லாம் உறவுகளுக்குள் இருந்த சந்தோஷமும், நெருக்கமும் இன்றைய தலைமுறையிடம் படிப்படியாக மறைந்து வருகிறது. உறவுகளின் தேவையை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
முன்பெல்லாம் கல்யாணம் என்றதும், வீடு முழுவதும் சொந்தங்களின் வருகை நிரம்பி வழியும். ஆளாளுக்கு ஒரு வேலையைப் பார்ப்பார்கள். பலகாரங்களும், இனிப்புகளும் வீட்டிலேயே செய்யப்படும். கல்யாணம் முடிந்தும், உறவினர்களின் வருகை பந்தலை பிரிக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது.

மணமகளின் கழுத்தில் மணமகன் தாலிக்கட்டும் நேரத்துக்கு சற்று முன்புதான், உறவினர்களே வரத்தொடங்குகிறார்கள். அதுவும் திருமணம் நடக்கும் வீட்டுக்கல்ல. கல்யாண மண்டபத்துக்கு. அப்படியென்றால், கல்யாண பந்தல் போடப்பட்டு இருக்கும் வீட்டின் நிலைமை? யாரும் இன்றி வெறிச்சோடிக் கிடப்பதுதான், அவ்வீட்டின் இன்றைய நிலைமையாகும்.

பொதுவாக, இட வசதி இல்லாதவர்களும், ஆள்பலம் இல்லாதவர்களுமே, முன்பெல்லாம் கல்யாணத்தை மண்டபங்களில் வைத்தார்கள். கல்யாணத்துக்கு வந்து செல்பவர்களுக்கும் அது வசதியாக இருந்தது. ஆனால், இன்று எல்லா வசதிகள் இருந்தும், கல்யாணத்தை மண்டபங்களில் தான் வைக்கிறார்கள்.

பொதுவாக, கல்யாணம் என்றால், வீடுகளில் கலகலப்பு வேண்டும். சொந்தங்களாலும், பந்தங்களாலும் கல்யாண வீடுகளை கட்ட வேண்டும். ரத்த உறவுகளின் வருகையால் மனம் சந்தோஷமடைய வேண்டும். இவையனைத்தும் இன்று கல்யாண வீடுகளில் காணாமல் போய்விட்டன. இதனால் ஏற்பட்ட உறவுகளின் பாதிப்புகளை மனித மனத்தை தனித்தனித் தீவுகளாக மாற்றிவிட்டன.

எந்த விசேஷமாக இருந்தாலும் செல்போனில் அழைப்பது, மொய்ப்பணம் தவிர்க்கப்பட்டது என அழைப்பிதழ்களில் அச்சிடுவது, வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், உணவுகளை ஓட்டல்களில் வாங்கி வருவது, உடல் நலமில்லாத உறவினர்களை ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மட்டும் விசாரிக்க செல்வது, வாழ்க்கை முறையை முறைப்படுத்த தவறியது என உறவுகளை மதிக்காத மனித செயல்பாடுகளையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறோம்.

அவ்வாறு நம் செயல்பாடுகள் மாறும்போது, தலைமுறைகளுக்கிடையே இடைவெளிகள் குறையும். மனிதநேயம் முறியாத மரமாக வளரும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது கட்டாயமாக்கப்படும். இல்லையென்றால், உறவுகளின் ஆணிவேர் அற்றுப்போகும். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப்பேசும் நிலையும் மாறிவிடும். இதை மனிதர்களான நாம் சிந்திப்போமாக...!

எழுத்தாளர் ஜவ்வை இஜெட்
Tags:    

Similar News