லைஃப்ஸ்டைல்

உறவுகளில் வேண்டாம் போலித்தனம்

Published On 2018-06-04 04:57 GMT   |   Update On 2018-06-04 04:57 GMT
இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும்.
இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்றிதழ்களுடன் வேலைக்கு அமர்ந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள் பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிறோம். ஆள்மாறாட்டம் செய்து அகப்பட்டுக்கொள்கின்ற நிகழ்ச்சிகளும் நிகழவே செய்கின்றன. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற விரும்புவதில் தவறில்லை. அதற்கு நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

போலித்தனம் என்பது ஏமாற்றுகின்ற முயற்சியின் வெளிப்பாடேயாகும். ஒரு பொருள் அமோகமாக விற்பனை ஆகிறது என்றால், அது எந்தப் பெயரில் விற்பனை ஆகிறதோ, அதே பெயரில் போலிகள் வரத்தொடங்கிவிடுகின்றன. உடனே அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்ற நிறுவனத்தார் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். இதெல்லாம் எதை காட்டுகிறது? பொய்யை நிஜம் போல நம்பவைப்பதில் சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பதைத்தானே.



ஆனால் உறவுமுறைகளில் போலித்தனம் வெற்றிப்பெறுவதில்லை. நாம் நாமாக இருப்பதில்தான் நமக்கு பெருமை. நாம் இன்னொருவரைப் போல எதற்காக நடிக்க வேண்டும்? நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டிக்கொண்டு எதற்காக வாழ வேண்டும்?

ஆனால் உறவுகளில் போலித்தனம் மிகுந்தே காணப்படுகிறது. முகத்துக்கு நேராக புகழ்பவர்கள், யாரை புகழ்ந்தார்களோ, அவர்களையே இன்னொருவரிடம் இகழ்வார்கள். இதுபோன்ற போலிகளுக்கு செல்வாக்கும் பலமும் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிரில் அளவுக்கு மீறிப் புகழ்கிறவர்களை நம்புவது ஒரு பலவீனம். இந்த உறவுகள் நெருக்கடி நேரங்களில் துணை நிற்பதில்லை.

பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும். எப்போது எந்த பொய் காட்டிக் கொடுக்கும் என்று தெரியாது. எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன், அச்சத்துடன் வாழ வேண்டி இருக்கும். யோசித்து பார்த்தால் போலித்தனமாக வாழ வேண்டிய அவசியமே இல்லை. நாம் எப்படி இருக்கிறோமோ அந்த நிலையில் உறவுகளை மேற்கொண்டால் போதும். நாம் இருக்கின்றபடி நம்மை ஏற்றுக்கொண்டு நம்மிடம் உறவு செய்கின்றவர்களே நல்ல உறவினர்களாக இருப்பார்கள். அவர்களே நிலைத்து நீடிக்கக் கூடியவர்கள். பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்த பிறகு ஏற்படுகின்ற உறவுகளே இயற்கையான உறவுகளாகும்.

ஜெ.யுகாதேவி, சமூக ஆர்வலர்
Tags:    

Similar News