லைஃப்ஸ்டைல்

கர்ப்பத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும்?

Published On 2019-04-11 03:26 GMT   |   Update On 2019-04-11 03:26 GMT
கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.
கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.

முதல் ஏழு வாரத்திற்கு கரு அமைதியாக இருக்கும். ஆனால், இருதயத் துடிப்பு மட்டும் நான்காவது வாரத்திலிருந்து ஆரம்பமாகிவிடும். கருவின் முதல் வாரத்தில் செல்களின் பிரிவுகள் வேகமாக நடந்து செல்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும். எட்டு வார அளவில்தான் அது ஒரு மனிதப் பிண்டம் போலக் காட்சியளிக்கும்.

எட்டு வார வயதில் கரு தோராயமாக ஒரு கிராம் எடையும். 2.5 செ.மீ. நீளமும் இருக்கும். முதல்கட்ட கர்ப்ப முடிவில் கருவின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அதன் பாலினத்தைக் கண்டுபிடிக்கமுடியும். இன்றும் விளக்கமாகச் சொல்லப்போனால் கர்ப்பத்தின் பன்னிரண்டாவது வார இறுதியில் கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்று சொல்ல முடியும்.

இரண்டாம் கட்டத்து கர்ப்பத்தில், அதாவது இருபத்தியெட்டு வாரங்கள் முடிவதற்குள் கரு வேகமாய் வளரும். இரண்டாம் கட்டத்து முடிவில் கரு வளர்ந்து ஆயிரம் கிராம் எடை உடையதாகவும், முப்பத்தைந்து செ.மீ. நீளமுடையதாயும் இருக்கும்.

மூன்றாம் கட்ட கர்ப்பத்தில், கரு இன்னும் அதிகமாய வளர்ந்து கருப்பைக்குள்ளேயே நகர ஆரம்பிக்கும். இரத்த ஓட்ட மண்டலம் எட்டிலிருந்து பன்னிரண்டு வாரங்களுக்குள்ளாக இறுதிக் கட்ட வளர்ச்சியை அடைந்துவிடும்.

பதினெட்டாவது வாரத்தில் கரு சுவாச அசைவுகளை மேற்கொள்ளும். இருந்தாலும் இருபத்தியேழு அல்லது இருபத்தியெட்டு வாரத்தில்தான் நுரையீரல் குழந்தை உயிருடன் இருக்குமளவு வளர்ச்சியடையும்.

பதினான்காவது வாரத்தில் கரு விழுங்குகின்ற செய்கையைச் செய்யும். வாயிருக்கும் பகுதியினைத் தூண்டினால் பதினேழு வார அளவில் மேலுதடை நீட்டும். இருபதாவது வாரத்தில் தூண்டினால் இரண்டு உதடுகளையும் நீட்டும்.

இருபத்தி இரண்டாம் வாரத்தில் கரு வாயிருக்கும் பகுதி தூண்டப்பட்டால் உதடுகளை மூடிக்கொள்ளும். இருபத்தியெட்டு, இருபத்தி ஒன்பதாவது வாரங்களில் கரு நன்கு பால்குடிக்க உறிஞ்சுமாறு செய்யும். ‘காட்டுப் பீ’ எனும் கருவின் குடலில் இருக்கும் பொருள், பதினாறாவது வாரத்தில் இருக்கும்.

எட்டுவார கருவாய் இருக்கும்போதே கருவிற்கு நரம்பின் செயல்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒன்பதாவது வாரத்தில் உள்ளங்ககைளும், பாதங்களும் உணர்வுடன் இருக்கும். ஒரு பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் செய்கை பதினேழாம் வாரத்தில் ஆரம்பிக்கும். அது இருபத்தி ஏழாம் வாரத்தில் நன்கு இருக்கும்.



கருவுக்குக் கரு அதன் செய்கைகளின் அளவு வேறுபடும். அது தாயின் மனநிலையைப் பொறுத்தும் மாறுபடும். கரு, சில உணர்ச்சித் தூண்டுதலுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும். உதாரணத்திற்கு, ஓர் ஒலியை தாயின் வயிற்றுப் பகுதியில் செலுத்தினால் கருவின் நாடித்துடிப்பில் மாறுதல்கள் இருக்கும். ஆனால், அதே ஒலியை திரும்பத் திரும்ப செலுத்தினால் அந்த நாடித்துடிப்பின் மாறுதல் அவ்வளவாக இருக்காது.

பதினெட்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகள் இருக்கும். இருபத்தி இரண்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகளோடு மெல்லிய குரலும் இருக்கும்.படிப்படியாக ஒவ்வொரு நான்கு வாரங்களில் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

நான்கு வாரத்தில் மூளைத் தண்டு மற்றும் மூளை வளர ஆரம்பிக்கும். கை கால்களும் முகமும் தோன்றும். இருதயம் துடிக்கத் தோன்றும். எட்டு வாரத்தில் எல்லா பெரிய உறுப்புகளும் வளர ஆரம்பிக்கம் ‘நஞ்சுக்கொடி’ எனச் சொல்லப்படும் ‘பிளசண்டா’ தெரிய ஆரம்பிக்கும். காதுகள், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் வளரும்.

பன்னிரண்டு வாரத்தில் கை, கால் விரல்களில் மிருதுவான நகங்கள் இருக்கும். இக்காலகட்டத்திலேயே குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் இருதயத் துடிப்பை முதன்முதலாகக் கேட்கலாம். பதினாறு வாரத்தில் கருப்பை சிசுவிற்கு நுகரும் உணர்வு தோன்றும். தாடை, பற்கள், முகத் தசைகள் மற்றும் வெளிக்காதுகள் வளரும். குழந்தை கருப்பைக்குள்ளேயே நகரும், உதைக்கும், விழுங்கும். மேலும் உங்கள் குரலைக்கூடக் கேட்கலாம்.

இருபது வாரத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் திரும்பும். மேலும், சில நேரங்களில் தலையைக் குதிகாலுக்கு மேல் வைத்திருக்கும். கண்ணின் புருவமும், கண்ணிமை முடி வளரும். தோல் தொட்டால் உணர்ச்சி உடையதாக இருக்கும். இருபத்து நான்கு வாரத்தில் கருவின் தோல் சிவந்தும், சுருக்கமுடையதாகவும் இருக்கும். மேலும், மென்மையான மிருதுவான மயிர் முளைத்திருக்கும். கை மற்றும் கால் விரல்களில் ரேகைகளைக் காணலாம்.

இருபத்தெட்டு வாரத்தில் குழந்தை கண்களைத் திறந்து மூடும். பெருவிரலை சூப்பும், மேலும் ஆழும். குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே உதைக்கும். தனது உடலை நீட்டி உடற்பயிற்சி செய்யும். ஒலி மற்றும் ஒளிக்கு தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும். முப்பத்திரண்டு வாரத்தில் கரு வளரும். எடை கூடும். உயரமாய் வளரும். குழந்தையின் முழங்கை அல்லது குதிகாலின் வடிவத்தை, தாயின் வயற்றின்மீது கை வைத்துப் பார்த்தே நீங்கள் உணர முடியும்.

முப்பத்தாறிலிருந்து நாற்பது வாரத்தில் குழந்தை நோயினை எதிர்க்கக்கூடிய நோய் எதிர்ப்புப் பொருட்களைத் தாயிடமிருந்து பெறும். கர்ப்பப் பையிலேயே குழந்தை நகர்ந்து இறுதி நிலையினை வந்தடையும்.
Tags:    

Similar News