லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்

Published On 2019-02-26 05:10 GMT   |   Update On 2019-02-26 05:10 GMT
கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் நலம்தான் சிசுவின் நலனும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.

இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும்.



இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.

கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரத்த சோகை வருவது மிகவும் இயல்பானதுதான். ஏனென்றால் குழந்தைக்கு புதிய அணுக்களை தயாரிப்பதற்காக தாயின் ரத்தம் செலவிடப்படும். இதனால் இரும்புச் சத்து முற்றிலும் குறைந்து போய் விடும். 30 சதவிகிதம் வரை கர்ப்பிணிகளுக்கு இரத்தசோகை ஏற்படலாம். இதைத்தவிர அவர்களுக்கு மூலநோய் இருக்கும் நிலையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை அதிகரித்து விடும்.
Tags:    

Similar News