அழகுக் குறிப்புகள்

30 ப்ளஸ்சிலேயே சர்க்கரை நோய் வருவதற்கான காரணம்

Published On 2023-09-01 09:30 GMT   |   Update On 2023-09-01 09:30 GMT
  • இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம்.
  • நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

பொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். ஏனென்றால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களையே நாம் அதிகம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் எடுக்கச் சொல்கிறோம்.

ஒருகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி, அதில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவுக்கு அதிகமான அந்த உணவு கொழுப்பாக உடலில் சேரும். கொழுப்பாக சேரும் அந்த தன்மை இன்றளவும் நம் மரபணுக்களில் இருக்கிறது.

நம்மில் பலரும் பசித்த பிறகு உணவு உண்ணும் பழக்கம் இல்லை. நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவதால் தேவைக்கு அதிகமான உணவானது கொழுப்பாக போய் சேர்ந்துவிடுகிறது. அதனால் நமக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால்தான் 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய சொல்கிறோம்.

பெற்றோர் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே சர்க்கரைநோய் இருந்தால் அந்த வாய்ப்பு 90 சதவிகிதமாக அதிகரிக்கும்.

நம் வாழ்க்கைமுறையும் சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்களில் பிரதானமாக இருக்கிறது. உடலியக்கமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வது, இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, இரவில் கண்விழித்திருப்பது என நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குப் பழகும்போது சர்க்கரைநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்க முடியும். ஸ்ட்ரெஸ்சும் மிக முக்கிய காரணம்.

ஏற்கெனவே நம் மரபணுக்களில் நீரிழிவுநோய்க்கான தன்மை இருக்கும்போது மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களும் சேரும்போது 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் 30 ப்ளஸ்சிலும், வாழ்வியல் மாற்றங்கள் இருப்பதாக உணர்பவர்கள் 40 ப்ளஸ்சிலும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்ப்பது அவசியம்.

Tags:    

Similar News