லைஃப்ஸ்டைல்

கோடையில் தலைமுடி அதிகம் உதிர்வது ஏன்?

Published On 2019-03-27 03:18 GMT   |   Update On 2019-03-27 03:18 GMT
பெண்கள் அதிகளவு சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.
தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை முதுமை, காயங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சில சமயங்களில் காலநிலை மாறுதல்களாலும் தலைமுடி உதிர்வது என்பது அதிகமாக இருக்கும். இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இப்போது கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.

கோடையில் முடி எப்படி அதிகம் உதிருமோ, அதேபோல முடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களை விட கோடையில் உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு வெப்பமான காலநிலையில் உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே இக்காலத்தில் முடி வளர்வதற்கு தேவையான பராமரிப்புகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கோடையில் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் வியர்வை. கோடையில் அதிகம் வியர்ப்பதால் முடியின் கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த சமயத்தில் சீப்பு கொண்டு அளவுக்கு அதிகமாக சீவினால், தலைமுடியை வேரோடு கையில் பெறவேண்டியது தான். கோடையில் தினமும் தலைக்கு குளிப்பதனால் தலையில் வியர்வையினால் சேர்ந்த அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.

ஆனால் தினமும் தலைக்கு ஷாம்பு போடாதீர்கள் இல்லாவிட்டால் தலைமுடி அதிகம் உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய்களும் நீங்கிவிடும். முக்கியமாக கோடையில் சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வெளியே செல்லும் போது தலைக்கு ஏதேனும் துணியை சுற்றிக்கொண்டோ அல்லது தொப்பி அணிந்து கொண்டோ, குடைபிடித்துக்கொண்டோ செல்லலாம்.

Tags:    

Similar News