லைஃப்ஸ்டைல்

பனிக்காலத்தில் சருமம் வறட்சியை தடுக்கும் தேங்காய் எண்ணெய்

Published On 2018-12-05 07:42 GMT   |   Update On 2018-12-05 07:42 GMT
பனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். இவற்றையெல்லாம் தேங்காய் எண்ணெயை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.
பனிக்காலம் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டது. ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.

பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம் வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.

தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத் தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.



குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெயை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள். ஐந்து விரல்களையும் விட்டால், எண்ணெய் அதிகம் வந்துவிடும். 'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம். 'கை கால் மட்டும்தான் அதிகம் வறண்டுபோகிறது. உடம்பு வறலவில்லை' என்பவர்கள், அந்தப் பகுதிகளில் மட்டும் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். பிடிக்காதவர்கள், கை காலுக்கு மட்டும் கடையில் விற்கப்படும் க்ரீமைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும். கொட்டும் பனியிலும் உங்கள் அழகு கொஞ்சும்.
Tags:    

Similar News