சமையல்

வரகு அரிசி புளியோதரை

Published On 2023-09-21 08:26 GMT   |   Update On 2023-09-21 08:26 GMT
  • புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.
  • புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும்.

பெரும்பாலான மக்கள் காலை முதல் இரவு உணவு வரை இட்லி, தோசை, ரொட்டி, பூரி, உப்மா, பொங்கல், சப்பாத்தி, சாதம், பிரியாணி போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவையே எடுத்துக்கொள்கிறார்கள். நாம் திருவிழா நேரங்களில் செய்யும் தின்பண்டங்கள், கோவிலில் வழங்கப்படும் புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.

சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் தான்  என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வித்தியாசமாக வரகு அரிசியை கொண்டு புளியோதரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வரகரிசி- ஒரு கப்

மல்லி (தனியா)- ஒரு டீஸ்பூன்

எள் - ஒரு டீஸ்பூன்

வெந்தயம் - கால் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

புளி - பெரிய எலுமிச்சை அளவு

வேர்க்கடலை - 5 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்

உளுந்தம்பருப்பு, கடுகு- ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை- தாளிக்க

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வரகு அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் அளவு ஒருகப் அரிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். ஒரு வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

அதன்பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும் போது இறக்கினால். புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை எடுத்து வரகு அரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

Tags:    

Similar News