பொது மருத்துவம்

தூங்கும் போது உடலில் என்ன நடக்கிறது..?

Published On 2023-05-12 07:59 GMT   |   Update On 2023-05-12 07:59 GMT
  • மூளைப் பகுதியில் ‘உறக்க மையம்’ என்ற ஒன்று உள்ளது.
  • நாம் உறங்கும்போது உறக்க மையம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது.

பகல் முழுவதும் உழைத்த பின்பு உடலும் உள்ளமும் களைத்துப் போகின்றன. சோர்ந்த உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் புத்துணர்வும் ஆற்றலும் ஊட்டுவதற்கு தூக்கம் மிகவும் அவசியம். சரி, நமக்கு தூக்கம் எப்படி வருகிறது?, தூக்கத்தில் உடலுக்கு என்ன நேர்கிறது? என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வோம்.

* தூக்கம் எப்படி வருகிறது?

மூளைப் பகுதியில் 'உறக்க மையம்' என்ற ஒன்று உள்ளது. இந்த உறக்க மையத்தை ரத்தத்தில் உள்ள கால்சியம் கட்டுப்படுத்துகிறது. உறக்க மையத்தில் வேண்டிய அளவு கால்சியம் சேர்ந்தவுடன் உறக்கம் வருகிறது. அப்படியானால், தூக்கமின்மை நோயால் தவிக்கும் மனிதர்களுக்கு உறக்கம் வருவதற்காக கால்சியத்தை உறக்க மையத்தில் செலுத்தினால் தூக்கம் வருமா என்றால்... 'வரும்' என்கிறார்கள். சில விலங்குகள் மீது இத்தகைய சோதனையைச் செய்து விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால், உறக்க மையத்தில் நேரடியாக கால்சியம் செலுத்தப்பட்டால் மட்டுமே உறக்கம் வரும். ரத்தக் குழாயில் கால்சியத்தைச் செலுத்தினால் வராது. நாம் சோர்வடையும் நேரத்தில் உறக்க மையம் சில ரசாயனப் பொருட்களால் உணர்ச்சியடைந்து இருக்கும். அப்போது கால்சியம் செயல்படவே, உறக்கம் வருகிறது.

* தூங்கும்போது என்ன நடக்கிறது?

நாம் உறங்கும்போது உறக்க மையம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது. முதலில் இதன் இயக்கத்தால் மற்ற உறுப்புகளிலிருந்து மூளையின் தொடர்பு அற்றுப் போகிறது. இரண்டாவது, உடலின் மற்ற உறுப்புகளையும் இது தடுத்துச் செயலாற்ற வைக்கிறது. உறக்கத்தில் நமது மன ஆற்றலும், உணர்ச்சியும் தற்காலிகமாக நிலைத்துப் போகின்றன.

தூக்கத்தில் உடலானது பலவிதமான அசைவுக்கு உள்ளாகிறது. நாம் இரவுத் தூக்கத்தில் சராசரியாக 20 முதல் 40 தடவை புரண்டு படுக்கிறோம். ரத்த ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதயத் துடிப்பு சற்று குறைகிறது. ஜீரண உறுப்புகள் சரியாக இயங்குகின்றன. ஈரலும், சிறுநீரகமும் தொடர்ந்து செயலாற்றுகின்றன. உறக்கத்தில் உடல் வெப்பம் ஒரு சென்டி கிரேடு குறைகிறது. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும் வேலை தூக்கத்தின்போது வேகமடைகிறது.

Tags:    

Similar News