பொது மருத்துவம்

இன்சுலின் சுரப்பும் நீரிழிவு நோயும்...

Published On 2022-11-27 01:30 GMT   |   Update On 2022-11-27 01:30 GMT
  • நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர்.
  • இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. நம்முடைய அவசர வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. எனவேதான் இதை சர்க்கரை வியாதி என்றும் பாமர மக்கள் அழைக்கின்றனர்.

நீரிழிவு என்பது கூட இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் வந்த பெயர்தான். இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் மிக முக்கியம் இந்த இன்சுலின் திரவத்தை நம் உடல் உறுப்பாகிய கணையம் சுரக்கின்றது.

குறிப்பாக கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இந்த இன்சுலினை சுரப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஒருவர் உடலில் அவருக்கு உண்ணும் உணவு மற்றும் தினப்படி உடல் இயக்கத்திற்கு ஏற்ப இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக இன்சுலின் போதுமான அளவுக்கு சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலின் போதுமான தரத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடுகிறது.

இதை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை ஆரம்ப கட்டத்திலேயே துவங்க வேண்டும். இல்லையென்றால் பல வகையான உடல் பிரச்சினைகளுக்கு இது காரணம் ஆகிவிடும். ஆரம்பக் கட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கும்போது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சற்று தீவிர நீரிழிவு நோய்க்கு ஆளானவருக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம் இதன் அளவு அவரவர்களின் நோய் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவகையில் நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர். காரணம் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர் தன் உடல் நிலையை சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது நோயின் தீவிரம் ஏற்ற இறக்கம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை தொடரும்போது அவர்களுக்கு வேறு எந்த வகையான மோசமான நோய்களும் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அம்மா அப்பா குடும்ப நபர்கள் யாரேனும் நீரிழிவு இருந்தால் நமக்கும் கட்டாயம் வரும் என்று மனதளவில் நாமாகவே அந்த நோயை எதிர்பார்ப்பதை தவிருங்கள்.

Tags:    

Similar News