பொது மருத்துவம்

மருத்துவ குணங்கள் நிறைந்த திராட்சை விதை...

Published On 2025-10-06 08:17 IST   |   Update On 2025-10-06 08:17:00 IST
  • இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.

உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன.

திராட்சை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கின்றன.

உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது இதயம் மற்றும் மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் தோலின் அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.

திராட்சை விதையில் இருந்து பெறப்படும் சாறு மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று உண்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது.

மனித உடல் எப்போதும் உடலில் நுழையும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும் நுட்பமான வேலையை தொடர்ந்து செய்கிறது. திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதைகளை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.

Tags:    

Similar News