பொது மருத்துவம்

குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

Published On 2023-11-27 03:30 GMT   |   Update On 2023-11-27 03:31 GMT
  • உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்யக்கூடியது.
  • குளிர்காலத்திலும் அதனை சாப்பிடலாமா?

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்டது. கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்யக்கூடியது. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் அனைத்து தரப்பினராலும் விரும்பி ருசிக்கப்படுகிறது. குளிர்காலத்திலும் அதனை சாப்பிடலாமா? என்ற குழப்பம் பலருக்கும் எழுவதுண்டு.

உண்மையில் வெள்ளரிக்காய், கோடையில் மட்டுமல்ல குளிர்காலத்திலும் சாப்பிட ஏற்றது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வெள்ளரிக்காயில் ஏராளம் இருக்கிறது. கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் குளிர்கால `சூப்பர் புட்' வரிசையில் வெள்ளரிக்காயும் இடம் பிடித்துள்ளது. அதனை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

நீர்ச்சத்து:

குளிர் காலத்தில் வீசும் உலர்ந்த காற்று சருமத்தை சேதப்படுத்தி, மந்தமாக்கி விடும். வெள்ளரிக்காயில் நீர் அதிகம் உள்ளடங்கி இருப்பதால் அது இயற்கையாகவே நீர்ச்சத்து கொண்ட சிறந்த பொருளாக விளங்குகிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. உடல் எடை இழப்புக்கு உடலில் போதுமான அளவுக்கு நீரேற்றம் இருப்பது முக்கியமானது. அதன் தேவையை வெள்ளரிக்காய் பூர்த்தி செய்துவிடும். அத்துடன் பசியை கட்டுப்படுத்தவும் உதவும்.

கலோரி:

உடல் எடையை குறைப்பதற்காக போராடுபவர்களுக்கு வெள்ளரிக்காய் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஆனால் அதிக நார்ச்சத்தை கொண்டிருக்கும். அதனால் அதிக கலோரிகளை சேர்க்காமலேயே உடல் எடையை குறைப்பதற்கு ஒத்துழைக்கும்.

சருமம்:

வைட்டமின்கள் ஏ, சி போன்றவை சருமம் விரும்பும் ஊட்டச்சத்துக்களாகும். இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும். சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மைக்கு வித்திடும். சரும செல்களை சேதப்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி, விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை குறைக்கும். சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் மாற்றும்.

நச்சுக்கள்:

வெள்ளரிக்காய் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும். இத்தகைய நச்சு நீக்கும் செயல்முறை செரிமான அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு எடை இழப்புக்குக்கும், பொலிவான சருமத்திற்கும் வித்திடும்.

வளர்சிதை மாற்றம்:

வெள்ளரிக்காயில் மாங்கனீசு மற்றும் வைட்டமின் கே உள்ளன. இவை இரண்டும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடை இழப்பையும் விரைவாக்குகின்றன. குளிர்காலத்தில் சரும நலன் காக்கவும் துணை புரிகின்றன.

Tags:    

Similar News