லைஃப்ஸ்டைல்

கட்டுப்பாடான வாழ்வு நீரிழிவு பிரச்சனைக்கு சிறந்த பலனை தரும்

Published On 2018-12-14 03:05 GMT   |   Update On 2018-12-14 03:06 GMT
அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது.
நீரிழிவு நோய் கட்டுப்பாடு குறித்து சென்னை எழும்பூர் மற்றும் கிண்டியில் அமைந்துள்ள டாக்டர் அ. இராமச்சந்திரன் நீரிழிவுநோய் மருத்துவமனை சிகிச்சை குழுவினர் தெரிவித்ததாவது :

‘எவ்வகை உணவை நாம் உண்டாலும் கடைசியாக உடலில் அது கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் மூலம் சர்க்கரை சத்தாக மாற்றப்படுகிறது. அப்போது சுரக்கும் இன்சுலின் அளவு குறைவது அல்லது வீரியமாகச் செயல்படாமல் போவது ஆகிய காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுவது நீரிழிவு குறைபாடு என்று குறிப்பிடப்படும்.

இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமல்லாது, இளைஞர்களுக்கும் நீரிழிவு குறைபாடு வர ஆரம்பித்துவிட்டது. பொதுவாக இவ்வகை குறைபாடு உள்ளவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நேர்மறை எண்ணங்களோடு செயல்பட்டு அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலும்.

அவ்வாறு கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலையில் தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளும். பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதயம் கண், நரம்புகள், சிறுநீரகம், கால் ஆகியவை சிக்கல்களுக்கு உள்ளாகலாம். அவற்றை தவிர்க்க வாழ்க்கை நடைமுறை மாற்றமே மிகச்சிறந்த வழியாகும். அதை ஒரு சிகிக்சை முறையாகவும் கருதலாம்.

மேலும், அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு குறைபாடு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது. சர்க்கரை இனிப்பை தவிர்த்தல், எண்ணெய், கொழுப்புணவை தவிர்த்தல் நார்ச்சத்து உணவுகளை அதிகம் உண்ணுதல், கிழங்கு வகை உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சி குறிப்பாக நடைப்பயிற்சி, மாடிமேல் ஏற லிப்டை எதிர்பார்க்காமல் படிக்கட்டுகளை பயன்படுத்துதல் ஆகியவை எப்போதும் நல்லது.

மேலும், மன பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஆகியவை இன்சுலின் நன்றாக சுரப்பதையும், செயல்படுவதையும் தடை செய்கின்றன. அதனால் அமைதியான வாழ்க்கைக்கு யோகா, தியானம் போன்றவை அவசியமானதாக உள்ளன.

மேற்கண்ட பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் நீரிழிவு குறைபாடு ஒரு பிரச்சினையாக இருக்காது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனைகள்படி மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவதுடன், குடும்பத்தார் ஆலோசனைகளையும் கேட்டு ஆரோக்கியமான வழிகளில் நடந்துகொள்வதும் நல்லது.

நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் நன்மைக்காக அவர்களது குடும்பத்தினர் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வைப்பதுடன், சோம்பல் காரணமாக உடற்பயிற்சியை செய்யத் தவறும் பட்சத்தில் அதன் நன்மைகளை பற்றி எடுத்து சொல்லவேண்டும். சுயக்கட்டுப்பாடு, குடும்பத்தாரின் ஆதரவு போன்றவை நீரிழிவு குறைபாட்டை கட்டுபாட்டில் வைக்க உதவி செய்வதுடன், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட நாள் வாழ நிச்சயம் உதவும்..’

இவ்வாறு நீரிழிவு நோய் சிகிச்சை குழுவினர் தெரிவித்தனர்.

எழும்பூர் தொலைபேசி எண்: 044-28582003-05

கிண்டி தொலைபேசி எண்: 044-22353729-32
Tags:    

Similar News