லைஃப்ஸ்டைல்

இதயம் காக்கும் பழம்

Published On 2018-06-10 04:48 GMT   |   Update On 2018-06-10 04:48 GMT
கிவி பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது.

‘கிவி’ என்பது நாம் அதிகம் உட்கொள்ளாத கனி. இதன் விலையும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது, கிவி.

உதாரணமாக, இப்பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், அது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

மாரடைப்புக்கு முன் பலவகையான நோயியல் நிகழ்வுகள் இதயத் தமனிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, கட்டியான அடைப்பாக மாறி, இதயத் தமனிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.

இவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது. இது வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும். இப்பழத்தில் ‘போலேட்’ என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட மிக அதிக அளவில் உள்ளன.

இந்தச் சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளவை ஆகும். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

கிவி பழத்தில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், இப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

இப்பழத்தில் உள்ள வைட்டமின் இ, பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கத் துணைபுரிவதுடன், பெண்கள் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகிறது.
Tags:    

Similar News