குழந்தை பராமரிப்பு

மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் விளையாட்டுகள்

Published On 2023-12-25 10:16 GMT   |   Update On 2023-12-25 10:16 GMT
  • குழந்தைகள் தனித்துவத்தோடு பிறக்கிறார்கள்.
  • 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும். அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயகட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு முளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும். அவற்றை பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக...

 சதுரங்கம்:

நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்த இந்த விளையாட்டு, அன்று முதல் இன்று வரை உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்ககும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

 புதிர் விளையாட்டுகள்:

பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

வியூக விளையாட்டுகள்:

பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும். அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

 சுடோகு:

எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும். அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

 வார்த்தை விளையாட்டுகள்:

குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

Tags:    

Similar News