லைஃப்ஸ்டைல்

கோடையில் குழந்தைகளுக்கு ஏற்ற பாரம்பரிய விளையாட்டுகள்

Published On 2019-04-12 02:52 GMT   |   Update On 2019-04-12 02:53 GMT
குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. உங்கள் மனதில் சுற்றுலா எண்ணமும், விளையாட்டு எண்ணங்களும் அலைமோதும். கோடையின் கொடுமை தெரியாமல் குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. செல்போன் விளையாட்டுகளைவிட சிறந்தவை பாரம்பரிய விளையாட்டுகள். அவை செல்போன் விளையாட்டுகளைப்போல நம்மை சோர்வடைய வைப்பதில்லை. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

தாயம்

சிறுவர் விளையாட்டுகளில் முதன்மையானது தாயம். தாயக்கட்டம், சொக்கட்டான் என வேறுபெயர்களிலும் இது அழைக்கப்படும். உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவி இருக்கிறது. ஆனால் விதிமுறைகளில் சிறிது மாற்றம் இருக்கும். இந்தியாவிலும் நீண்ட காலமாக இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. தாயம் ஆடுவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. காய் நகர்த்தலில் கணிதத் திறன் மேம்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவது வாழ்வின் அடிப்படையை விளக்கும். புத்திக்கூர்மையை வளர்க்கும்.

கிச்சுக்கிச்சு தாம்பளம்


கிச்சுக்கிச்சு தாம்பளம் விளையாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மணலை சிறிது குவித்துக் கொண்டு சிறு குச்சி அல்லது கற்களை அதனுள் மறைத்து வைத்து சரியாக எந்த இடத்தில் மறைத்து வைத்தோம் என்பதை கண்டுபிடிக்கச் செய்து விளையாடப்படுவது இந்த ஆட்டமாகும். சிறுவர்களின் மதிநுட்பத்தை வளர்க்கக்கூடியது இந்த விளையாட்டு. துப்பறியும் ஆற்றலை அதிகமாக்கும். சிந்தனையை தெளிவாக்கும். குறி அறியும் திறனும் வலுப்பெறும்.

பச்சைக்குதிரை

பச்சைக்குதிரை விளையாட்டும் சிறுவர்களுக்கான நிழல் விளையாட்டுகளில் ஒன்றாகும். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் அவரைத் தாவிச் செல்வது இந்த விளையாட்டாகும். குனிந்து நிற்பவர் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக உயரத்தை கூட்டுவார். அதற்கேற்ப மற்றவர்கள் தாவிச் செல்லவேண்டும். இந்த ஆட்டத்தை விளையாடுவதால் சிறுவர்களின் உடல் வலுப்பெறும். வளர்ச்சி வேகமடையும். குதிக்கும் திறன் அதிகமாவதால் உடற்செயல்கள் உந்தப்பட்டு கழிவுகள் வெளியேறும். எச்சரிக்கையுடன் செயல்படும் ஆற்றலையும் வளர்க்கும்.



பல்லாங்குழி

பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டாக விளங்கும் பல்லாங்குழியும் கோடைக்கு ஏற்ற விளையாட்டுதான். பழங்காலத்தில் சிறுகற்களை குழியில் நிரப்பி விளையாடப்பட்டதால் இதற்கு கல்லாங்குழி என்ற பெயரும் இருந்ததுண்டு. இது இருவர் ஆடும் ஆட்டமாகும். எண்ணிக்கையைக் கொண்டு ஆடப்படுவதால் கணிதத் திறனை வளர்க்கும். வணிக நுட்பத்தையும் வளர்க்கும். தக்கம் வைத்து விளையாடும் விதி இதில் உண்டு. இது சேமிக்கும் பண்பை உணர்த்துவதாக அமையும். மதிநுட்பமாக விளையாடினால், ஜெயிக்க முடியும் என்பதால் புத்திக்கூர்மையையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

கிட்டிப்புள்

சில்லுக்குச்சி அல்லது கிட்டிப்புள் என அழைக்கப்படும் விளையாட்டும் சிறுவர்களை கவர்ந்த விளையாட்டாகும். ஒரு நீண்ட குச்சியால், நுனி சீவப்பட்ட சிறிய சில்லுக்குச்சியை அடித்து விளையாடுவது இந்த விளையாட்டாகும். இதுவும் குழந்தைகளின் குறிதிறனை அதிகமாக்கும். அளவீட்டு கணிதமுறையை நன்கு விளங்கச் செய்யும். கைகளை வலுப்படுத்தும். சிந்தனையையும் செம்மையாக்கும்.

ஆடுபுலிஆட்டம்-ஏணிக் கட்டம்

தாயக்கட்டம்போல குறிப்பிட்ட வடிவில் அமைந்த கோடுகளில் இரு விதமான காய்களைக் கொண்டு ஆடப்படுகிறது ஆடுபுலியாட்டம். ஒரு வகை காய்கள் புலி ஒன்றும், மற்றொரு வகை காய்கள் ஆடு என்றும் குறிப்பிடப்படும். அடுத்தடுத்த புள்ளிகளுக்கு காய்களை நகர்த்தும்போது புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு. இப்படி விளையாடுவதால் புத்தி கூர்மையடையும். தன்னம்பிக்கை வளரும். சிக்கலைத் தீர்க்கும் சாதுர்ய தன்மை வளரும். புதுப்புது எண்ணங்கள் உருவாகும். ஆடுகளாக இருந்தாலும் புலியை மடக்க முடியும் எனும்போது தலைக்கனத்தை குறைக்கும் தன்மையையும் இந்த விளையாட்டு வழங்கும்.

இதுபோன்றதே பாம்பு ஏணி ஆட்டம். கணிதத் திறன் வளர்க்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை புரிய வைத்து வாழ்வியல் திறன் வளர்க்கும்.



கயிறாட்டம்

சிறுமிகளுக்கு ஏற்ற விளையாட்டு கயிறாட்டம். ஆங்கிலத்தில் ‘ஸ்கிப்பிங்’ எனப்படும் இந்த விளையாட்டு குழந்தைகளின் மூச்சுமண்டலத்தை தூய்மையடையச் செய்யக்கூடியது. உடல்உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படத்தூண்டும். உடற்கழிவுகளை வெளியேற்றும். பெண்களின் கருப்பை வலுப்பெற உதவி செய்யும். இது விளையாட்டு என்பதுடன் சிறந்த உடற்பயிற்சி என்றே கூறிவிடலாம்.

ஊதித்தள்ளும் விளையாட்டும் நமது பாரம்பரியத்தில் இருந்துள்ளது. புளி விதைகளை வட்டத்திற்குள் வைத்து ஊதி ஊதி கோட்டிற்கு வெளியே நகர்த்திவிட்டு அதை தனக்கு உரிமையாக்கி வெற்றி கொள்வது இந்த விளையாட்டு. மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது இந்த விளையாட்டு. செரிமான சிக்கல்கள் தோன்றாது. புரிந்துணர்வும், சிக்கலை தீர்க்கும் மதி நுட்பமும் வேலை செய்யும்.

இன்று இந்த விளையாட்டுகளில் பல மறக்கடிக்கப்பட்டுவிட்டன. நகர வளர்ச்சியும், செல்போன் விளையாட்டுகளும் அதற்கு முக்கிய காரணமாகும். கோடை நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடுவதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்த்து, மதியையும், உடலையும் வளமாக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.

பம்பரம்

சிறுவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். கயிற்றால் சுற்றி ஆட்டுவிக்கப்படும் பம்பரங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வட்டத்தில் வைத்து, பம்பரங்களை வெளியேற்றி விளையாடுவது சுவாரஸ்யமிக்க பம்பரம் விளையாட்டாகும். சரியாக குறிபார்த்து பம்பரத்தை அடித்து வெளியேற்று வதால் சிறுவர் களின் குறித் திறனை இந்த விளையாட்டு வளர்க்கும். மதி நுட்பத்தையும், இலக்குடன் செயல்படும் திறனையும் வளர்க்கும், எதிராளியின் திட்டத்தை யூகித்து அறியும் ஆற்றல் மேம்படும். தனது பம்பரம் வட்டத்தில் இருந்து வெளியேற காத்திருப்பது பொறுமையை வளர்க்கும். எதிராளியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படும்போது சுறுசுறுப்பை தரும். போட்டியை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கும்.
Tags:    

Similar News