வழிபாடு

பெண் சாபம் நீக்கும் சித்திரகுப்தன் வழிபாடு

Published On 2024-04-23 05:22 GMT   |   Update On 2024-04-23 05:22 GMT
  • சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்திரகுப்தன்.
  • `குப்தன்’ என்றால் `கணக்கன்’ என்று பொருள்.

ஒரு சமயம் கயிலாயத்தில் பார்வதியும், பரமேஸ்வரனும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது அவர்களை தரிசிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் மகரிஷிகளும் மற்றும் தபோவனர்களும் தேடி வந்தனர். பரமேஸ்வரன் 'பூலோகத்தில் உள்ள மானிடர்களின் பாவ - புண்ணிய கணக்குகளை எழுத ஒருவரை நியமிக்க வேண்டும்' என எண்ணினார். தற்போது 'நமக்கு இருக்கும் இரு புத்திரர்களுக்கும் (விநாயகர், முருகன்), அநேகமான பொறுப்புகள் இருப்பதால், புதியதாக ஒருவர் அதையெல்லாம் கவனிப்பது நல்லது' என நினைத்தார்.

அப்பொழுது பார்வதி தங்கக் தகட்டில் வரைந்த அழகான சித்திரத்துடன் வந்தாள். அந்த சித்திரத்தைக் கண்ட பரமேஸ்வரன் அதிசயித்தார்.

பரமேஸ்வரன் பார்வை பட்டதும், அந்தச் சித்திரம் உயிர் பெற்று எழுந்தது. சகல தேவர்களும் ஆச்சரியப்பட, உயிர் பெற்று வந்தவரிடம் `பாவ - புண்ணிய கணக்குகளை கயிலை மலையில் அமர்ந்து எழுது' என சிவபெருமான் உத்தரவிட்டார். சித்திரத்தில் இருந்து பிறந்ததால் இவரை 'சித்திரகுப்தன்' என அழைத்தனர்.

'குப்தன்' என்றால் `கணக்கன்' என்று பொருள். அதே நேரத்தில் தேவேந்திரனும், இந்திராணியும், ஈசனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அதற்கான தவத்தை மேற்கொண்டிருந்தனர். இப்படி அவர்கள் தவம் இயற்றுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதை இங்கே பார்ப்போம்..

ஒரு சமயம் தேவேந்திரன் பூமியில் புண்ணிய தலத்தை நோக்கி தீர்த்த யாத்திரை வந்தார். அப்போது வழியில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்தைக் கண்டார். அங்கு பேரழகுடன் இருந்த அவரது மனைவியான ரிஷி பத்தினி அகலிகையை கண்டார். அகலிகையை அடைய எண்ணி மறுநாள் காலையில் கோழி உருவெடுத்து சூரியன் உதிக்கும் முன் வந்து கூவினார். கவுதமர், பிரம்ம முகூர்த்தம் தொடங்கி விட்டதாக எண்ணி (சூரியன் உதிக்கப் போகிறான்) கங்கையில் நீராட கிளம்பினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்திரன், கவுதமர் போல் வேடம் அணிந்து அகலிகையை அடைய ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

அதே நேரத்தில் கவுதமர் கங்கையை நோக்கி செல்கையில், அநேக கொடிகளில் பூக்கள் அரும்பாகவே இருப்பதைக் கண்டார். பூக்கள் இன்னும் பூக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் பொழுது விடியவில்லை என திரும்பி வந்தார். கவுதமர் வருவதை அறிந்த இந்திரன் பூனையாக மாறி வெளியே ஓட எண்ணினான். ஆனால் கவுதமர், இந்திரனை மடக்கி "நீ எதற்காக இங்கு வந்தாய்?" என்றார்.

அதற்கு பதிலளித்த இந்திரன், "இந்த வருட பஞ்சாங்க பலன் கேட்க வந்தேன்" என்றான். ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்த கவுதமர், "நீ எதை எண்ணி காமம் கொண்டு இங்கு வந்தாயோ, அதே உனக்கு உண்டாகும். உன் உடல் முழுக்க ஆயிரம் யோனிகள் உண்டாகும்" என சபித்தார்.

பின் அகலிகையின் பக்கம் திரும்பிய கவுதமர், "இந்திரன் என்பதை நீ அறியாமல் இருந்தாய். எனவே நீ கல்லாய் போவாய்" என சபித்தார். அதற்கு அகலிகை "நீங்கள் எவ்வளவு பெரிய மகரிஷி. நீங்கள் இவ்வாறு சொல்லலாமா? இதில் எனது தவறு ஒன்றும் இல்லை" எனக் கூறினாள்.

(இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனியுங்கள். ரேணுகாதேவி ஜலத்தில் தெரிந்த கந்தர்வனின் உருவத்தை கண்ணால் கண்டு மனதால் விரும்பினாள். அதற்காக அவள் கற்பிழந்ததாக தலை வெட்டப்பட்டாள். ஆனால் அறியாமல் தன்னை இழந்த அகலிகை, மீண்டும் சாபத்தில் இருந்து விடுபட்டு கற்புக்கரசி என கொண்டாடப்பட்டாள். அந்த காலத்தில் கற்புக்கு வைத்துள்ள அளவுகோல் சரீரத்தை சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது என தெரிந்து கொள்ள வேண்டும்)

உடனே கவுதமர், அகலிகையை நோக்கி "ராமாவதாரத்தில் ராமபிரானின் திருவடி, கல்லாயிருக்கும் உன்மேல் பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு, மீண்டும் என்னை வந்து அடைவாய்" என்று கூறினார். அப்போது இந்திரனும் கவுதமரின் திருவடியை வணங்கி, தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். "நீ பரமேஸ்வரனை குறித்து கயிலாயத்தில் தவம் செய். உனது ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறும்" என்று கூறி அருளினார்.

அதே நேரத்தில் அகலிகை சிறிதும் கோபம் குறையாமல் "பெண்ணின் சாபம் பொல்லாதது. நீ தேவேந்திரனாக இருந்தாலும் கூட பத்தினி சாபம் உன்னை விடாது. பட்ட மரம் பூத்தாலும் பூக்கும், காய்க்காத மரமும் காய்க்கும். ஆனால் உனக்கு புத்திர பாக்கியம் ஏற்படாது" என சபித்தாள்.

அடுத்து வந்த நாட்களில் இந்திரன், ஈசனை நினைத்து வழிபட்டதன் பலனாக, ஆயிரம் யோனிகளும், ஆயிரம் கண்களான மாறின.

ஆனால் அகலிகை சபித்தது போல, இந்திரனுக்கு புத்திரப் பேறு மட்டும் கிடைக்கவில்லை. அந்த சாபம் நீங்கவே, இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான்.

அப்போது பரமேஸ்வரன், காமதேனுவை அழைத்து "நீ என்னை தரிசனம் செய்து கொண்டிருந்தது போதும். நீ இப்போது தேவலோகம் செல்" என்றார். அதற்கு காமதேனு "சுவாமி உமது தரிசனத்தை விட்டு, நான் தேவலோகம் செல்ல வேண்டுமா?" என கேட்க, "நீ கவலைப்படாதே.. தேவலோகம் சென்று நீ ஒரு குழந்தையை ஈன்று கொடுத்துவிட்டு இங்கு வந்து விடலாம்" என்றார், சிவபெருமான்.

அதன்படியே காமதேனு தேவலோகம் சென்றது. ஆனால் காமதேனுவுக்கும் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. இதனால் இந்திராணி மனம் கலங்கினாள். 'நமக்கு தான் குழந்தை பேறு இல்லை. காமதேனுவுக்கும் குழந்தை பாக்கியம் இல்லையே. பத்தினி சாபம் இப்படியா வதைக்கும்' என வருந்தினாள்.

இதை அறிந்த பரமேஸ்வரன், சித்திரகுப்தனை நோக்கி "நீ காமதேனு கர்ப்பத்தை அடைந்து, அங்கு நீ புத்திரனாகப் பிறந்து தேவலோகத்தில் வசித்து வருவாய்" என கூறி அருளினார்.

அவரது ஆணைக்கிணங்க, காமதேனு கர்ப்பத்தில் மூன்றே முக்கால் நாழிகை இருந்து, பின் கையில் எழுத்தாணி யுடன் பிறந்தார் சித்திரகுப்தன். தேவேந்திரன் ஒளி பொருந்திய சித்திரகுப்தனை வணங்கி, "நீ இங்கிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொள்" என்றார்.

குறுகிய காலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்ற சித்திரகுப்தன், தேவேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி எமபுரியில் எமதர்மராஜனின் எமபட்டிணத்தில் கணக்கராக அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுத ஆரம்பித்தார்.

சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தன் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோ பூஜை

செய்ய வேண்டும். காமதேனுவின் வயிற்றில்இருந்து சித்திரகுப்தன் பிறந்ததால், அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் பசும்பால், பசு நெய், பசுந்தயிர் ஆகியவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். உப்பில்லாத உணவுதான் உண்பார்கள். தரையில் சித்திரகுப்தன் உருவத்தை எழுதி (அவர் சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால்) வழிபாடு செய்வார்கள்.

சித்திரகுப்தனுக்கு பலவித சித்ரான்னங்கள் படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, பெண் சாபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜாதக தோஷங்களும் விலகும்.

காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் (பவுர்ணமி) சித்தரகுப்தனுக்கு காலையில் விசேஷ பூஜையும், மாலையில் விமரிசையாக திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

சித்திர குப்தன் அங்க பூஜை

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாமாவையும் சொல்லி பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

* பாபநாசநாய நம: பாதெள பூஜயாமி (கால்)

* கமலவர்ணாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)

* சித்ராயநம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)

* சித்ரரூபாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)

* நதாபீஷ்டதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)

* வ்ருகோதராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)

* ஓம் ப்ராக்ஞாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)

* காலாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

* பஹுரூபாய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)

* அந்தக ஸசிவாய நம: அதரம் பூஜயாமி (உதடு)

* மத்யஸ்தாய நம: முகம் பூஜயாமி (முகம்)

* கருணாநிதயே நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)

* பத்ம நேத்ராய நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்)

* நானாரூபாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)

* லலிதாய நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

* சித்ரகுப்தாய நம: சிர: பூஜயாமி (தலை)

* ஸர்வேச் வராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி

Tags:    

Similar News