வழிபாடு

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-05-27 06:31 GMT   |   Update On 2023-05-27 07:18 GMT
  • 1-ந்தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
  • 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், கொடிப்பட பூஜை நடைபெற்றது.

இதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளிகாமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி, மயில் மற்றும் தங்கமயில், தங்ககுதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் நாள் விழாவாக வருகிற ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் , அதனைதொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

7-ம் நாள் விழாவாக ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாகத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாள் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரியதந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமயசொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News