வழிபாடு

பிரம்மோற்சவ விழா 2-வதுநாள்: மலையப்பசாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா

Update: 2022-09-29 04:41 GMT
  • இரவு ஹம்ச வாகன வீதி உலா நடந்தது.
  • இன்று காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு சுப்ரபாதம், தோமால சேவை, சகஸ்ர நாமார்ச்சனையும், உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

அதன் பிறகு உற்சவர் மலையப்பசாமி வாகன மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 'பத்ரி நாராயணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர்.

பல்வேறு குழுவை சேர்ந்த ஆண்களும், பெண்களும் மகா விஷ்ணு, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். பல்வேறு நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன் பிறகு இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நிகழ்ச்சியில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, இணை அதிகாரிகள் சதா பார்கவி, வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

Tags:    

Similar News