சிவனுக்கு படைக்கப்படும் களி நைவேத்தியம்
- ஒரு நாள் பெரும் மழை பெய்ததால், விறகுகள் மழையில் நனைந்து, விற்க முடியாமல் போனது.
- சிதம்பரத்தில் உள்ள சிவபெருமானின் வாய்ப்பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக் கொண்டிருந்தது.
மார்கழி மாதத்தில் பவுர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆனால், மற்ற ஆலயங்களில் இல்லாத சிறப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் நடராஜருக்கு முக்கிய நைவேத்தியமாக களி படைக்கப்படுகிறது. அதன் பின்னால் பக்திபூர்வமான ஒரு கதையும் உள்ளது.
முன்பொரு காலத்தில் சிதம்பரத்தில் சேந்தன் என்ற சிவ பக்தன் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டும் தொழில் செய்து வந்த அவர், அதில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். ஏழ்மையில் இருந்தாலும், தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகே உணவருந்தும் பழக்கத்தை அவர் கொண்டிருந்தார்.
ஒரு நாள் பெரும் மழை பெய்ததால், விறகுகள் மழையில் நனைந்து, விற்க முடியாமல் போனது. அன்றைய தினம் சேந்தன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். அவருக்கு எப்படி உணவு அளிப்பது என்று யோசித்த சேந்தன் கவலை அடைந்தார். அவரது மனைவி, வீட்டில் சிறிது அரிசி மாவும், வெல்லமும் இருப்பதாக கூறினார். அதைக்கொண்டு சிவனடியாருக்கு களி செய்து படைத்தார்.
அதைச் சாப்பிட்ட சிவனடியார், மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். அன்றைய தினத்திற்கு மறுநாள் திருவாதிரை நாளாகும். அதனால் நடராஜரை தரிசிக்க வேண்டி சேந்தனும், அவர் மனைவியும் சிதம்பரம் சென்றனர். சிதம்பரத்தில் உள்ள சிவபெருமானின் வாய்ப்பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவர்கள், அதிசயித்து போயினர்.
தன் வீட்டிற்கு சிவனடியாராக வந்து களி உண்டது சிவபெருமான் என்பதை அறிந்ததும் சேந்தனும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின்பு, இந்த அற்புத நிகழ்வை அறிந்த ஊர் மக்கள், சேந்தனின் பக்திக்கு தலை வணங்கினர். மேலும், அன்று முதல் திருவாதிரை தினத்தன்று இறைவனுக்கு முக்கிய நைவேத்தியமாக களி படைக்கப்படுகிறது.