வழிபாடு

உலகப் புகழ்பெற்ற சிதறால் குடைவரைக் கோவில்

Published On 2024-04-15 05:25 GMT   |   Update On 2024-04-15 05:25 GMT
  • கேரள மாநிலம் `கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது.

இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய கேரள மாநிலம் `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இன்றைய குமரி மாவட்டமும், கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக, அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. எனவே குமரி மாவட்டமும் இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சமணர்களின் பெருமைகளைச் சொல்லும் சிதறால் மலைக்கோவிலும் ஒன்று.

இங்குள்ள திருச்சாணத்து மலை மீது அமைந்திருக்கும் குடைவரைக் கோவில், பல்வேறு வரலாற்று அதிசயங்களைத் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

 சமணத் துறவிகள்

இந்தியாவில் தோன்றிய பல சமயங்களில் சமணமும் ஒன்று. இந்த சமயத்தை பின்பற்றியவர்கள் 'சமணர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். எதிலும் பற்று இல்லாத துறவற வாழ்க்கையை வாழ்வது சமண மதக் கொள்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் சிதறால் மலைப்பகுதியில் வசித்து வந்ததாக சான்றுகள் சொல்கின்றன.

இந்த சிதறால் மலைக்கிராமம், குமரி மற்றும் கேரள எல்லையோரம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. குமரியின் 2-வது பெரிய நகராக கருதப்படும் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.

தொலைவில் இருந்து பார்க்கும்போது மலை உச்சியில் ஒரு சிறிய புள்ளியைப்போன்று இந்த சிதறால் மலைக் கோவில் மிக அழகாகத் தெரியும். சுற்றிலும் உயர்ந்தோங்கிய பாறைக்கூட்டங்கள், மலையில் இருந்து பார்க்கும் திசை அனைத்தும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாய், பூமிப் பந்து பசுமைப் பட்டாடையை உடுத்தியது போன்று காட்சி அளிக்கிறது.

மலை அடிவாரத்தில் இருந்து அரை கி.மீ. தூரம் வரை படிகள் வழியே மேலே நடந்து சென்றால் குகைக் கோவிலை அடைந்து விடலாம். முன்பு திருச்சாணத்துப்பள்ளி அல்லது திருச்சாணத்து மலை என்று அழைக்கப்பட்ட இந்த ஊா், திகம்பர சமண மதத் துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்தான், இந்த சிதறால் மலை குடைவரைக் கோவில்.

இதய வடிவில் குளம்

இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் உள்ளேயும், வெளியேயும் சமண மதம் தோன்றவும், வளரவும் காரணமாக இருந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் முதலாம் மகேந்திரவா்மனின் உதவியால் சமண மதம் வளா்ந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் இந்த குகைக்கோவில், பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது.

இந்த சிதறால் மலை 'சொக்கன் தூங்கி மலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதறால் குகை, அனைத்து தரப்பினரையும் கவரும் அழகிடமாகத் திகழ்கிறது. இங்கு 9-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.

கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மகாவீரர் சிலை, அம்பிகா இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் காட்சி, பறக்கும் வித்யாதாரர் போன்ற சிற்பங்கள் அவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிற்பங்களுக்கு கீழ் உள்ள ஒரு சிறு குகையில், கல்லில் வடிக்கப்பட்ட 5 தலை நாகர் சிலையும், பார்ச்சுவநாதர் உருவமும், பத்மாவதி உருவமும் உள்ளது.

ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதைச் செதுக்கியவர்களின் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள், உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சிதறால் மலையில் இதய வடிவில் அமைந்த குளம் ஒன்று, அந்த இடத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது. சமணத் துறவிகளால் இயற்கையான முறையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள குளம் இதுவாகும்.

ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறையில், இயற்கையாக அமைந்த குகைக்குள் பகவதி கோவில் அமைந்திருக்கிறது. குகை மேற்குப் பார்த்து உள்ளது. திருச்சாணத்து மலையில் காணப்படும் தற்போதைய பகவதி கோவில், ஒரு காலத்தில் தென்னாட்டில் வாழ்ந்த சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக திகழ்ந்துள்ளது.

இங்கு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளி அல்லது சமணப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டதாகவும், அதில் பல நூறு மாணவர்கள் படித்ததாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற மகாராணி சொத்துகளை அளித்தது பற்றியும், தமிழ்-பிராமி மொழியில் கல்வெட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மறைந்த பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த சமயத்தில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவரிடம், அந்த நாட்டு தலைவர் சுவன்லாய், திருச்சாணத்து மலையைப் பற்றி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த சமணக் கோவிலாக சிதறால் கோவில் இருந்திருக்கிறது.

அதன்பிறகு நேருவின் உத்தரவுப்படி, இன்று அந்தக் கோவில் மத்திய தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 8-ம் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியால் இந்தியாவில், குறிப்பாக தென் பகுதிகளில் சமண, புத்த மதங்கள் வீழ்ச்சியடைந்தன. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப்பின் பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றிக் கிடந்த இந்தக் கோவில், இரண்டாம் ராஜராஜன் காலத்தில்தான் சற்று புதுப்பொலிவு அடைந்திருக்கிறது. பின்னர் பத்மாவதி சிலை, பகவதி சிலையாக மாற்றப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில், சிதறால் குகையில் `சிதறாலம்மா' என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

Tags:    

Similar News