வழிபாடு

பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த காட்சி.

சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தேர் வீதி உலா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-01-05 04:47 GMT   |   Update On 2023-01-05 04:47 GMT
  • தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும்.
  • நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ந்தேதியன்று உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதரால் கொடியேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி விதியுலா மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைற்றது. இதனை ஒட்டி இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதி வந்தடைந்தது.

சுமார் 8 மணி அளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்ட சுவாமிகள் ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகர், விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

கீழரத வீதியிலிருந்து புறப்பட்ட இத்தேர் முறையே தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி வழியாக வலம் வரும்.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம், தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடை பெறுவதால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.

முன்னதாக தேரோடும் வீதிகளில் திரளான பெண்கள் சாலைகளை சுத்தம் செய்து கோலமிடுவதும், சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பதிகங்களை, மேளதாளம் முழங்க பாடி வருவதும் ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.

விழாவிற்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சிதம்பரம் நகராட்சி சார்பில் சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 6 மணி அளவில் தேர் நிலையான கீழரதவீதி வந்தடையும். அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடக்கவுள்ள நிலையில், நாளை அதிகாலை இரண்டு மணி முதல் ஆறு மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும், நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை மாலை சுமார் 4 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சி தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News