வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 21-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-10-19 08:42 GMT   |   Update On 2022-10-19 08:42 GMT
  • 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது.
  • 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அனைத்துப் பூஜைகளும், திருவிழாக்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

அதையொட்டி பவித்ரோற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டி வெளியீட்டு விழா திருமலையில் உள்ள தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. அதில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டியை வெளியிட்டார்.

20-ந்தேதி மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம். 21-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 22-ந்தேதி மூலவர், உற்சவர், விமான பிரகாரம், கொடிகம்பம், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News