வழிபாடு

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டம் 5-ந்தேதி நடக்கிறது

Published On 2023-02-03 06:23 GMT   |   Update On 2023-02-03 06:23 GMT
  • 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது.
  • 12-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.

பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும். நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்படும்.

வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வார்கள்.வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை திருத்தேர் நிலையை அடைகிறது.

வருகிற 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ந்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 14-ந் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News