வழிபாடு

முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தபோது எடுத்தபடம்.

"அரோகரா" கோஷம் அதிர நடந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

Published On 2023-02-04 03:53 GMT   |   Update On 2023-02-04 03:53 GMT
  • திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர்.

மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணிய குருக்கள் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

Tags:    

Similar News