வழிபாடு

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் 17-ந்தேதி மாலை அணிந்து விரதம்

Published On 2023-11-14 05:32 GMT   |   Update On 2023-11-14 07:54 GMT
  • மாலை அணிந்து, இருமுடிகட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
  • ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறக்கப்படும்.

கன்னியாகுமரி:

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான வருகிற 17-ந்தேதி கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில், குமாரகோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வருகிற 17-ந்தேதி அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஐயப்ப பக்தர்கள் வருகிற 17-ந்தேதி அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் ௪௧ நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைபிடிப்பது வழக்கமாகும்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற்காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News