வழிபாடு

புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-8)

Published On 2024-03-19 03:21 GMT   |   Update On 2024-03-19 03:21 GMT
  • நோன்பு பாவங்களில் இருந்து காக்கும் ஒரு கேடயம் ஆகும்.
  • நோன்பு மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம்.

நோன்பு ஒரு கேடயம்

நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம், முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது கோபமாக பேசினால், 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி)

நோன்பு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. அது மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம். நோன்பு கெட்ட வார்த்தைகளை பேசுவதை, பொய்யான பேச்சுக்களை பேசுவதை, பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் கேடயம்.

முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும், சண்டை சச்சரவுகளில் இருந்து பாது காப்பு அளிக்கும், தகாத பார்வைகளை தடுக்கும்,பேராசைகளை அழிக்கும் கேடயம் நோன்பாகும். விபச்சாரத்தில் இருந்து தடுத்து, கற்பைக் காக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் கேடயம் நோன்பு.

அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறுவது: "நோன்பு ஒரு கேடயம் ஆகும். அதனை உடைக்காமல் இருக்கும் வரை ... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்" (நூல்: நஸயீ, இப்னு மாஜா)

"உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையா, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

"ரமலானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!' என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவரை அடித்தார்கள்". (நூல்: புகாரி)

நோன்பு என்பது ஒரு கேடயம். கேடயம் போர் வீரர்களையும், அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் நன்றாக பாதுகாப்பது போன்று, நோன்பும் நோன்பாளிகளை பாவமான காரியங்களில் இருந்தும் பாதுகாக்கிறது. நோன்பாளிகளும் அந்த கேடயத்தை அணிந்து, பாவமான காரியங்களில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கிறார்கள்.

நோன்பு எனும் கேடயத்தை உடைக்காமல் இருக்கும் வரைக்கும் நோன்பாளிகள் முழுமையான நோன்பாளிகளாகவே இருக்கிறார்கள். ஏதேனும் பாவச்செயல்களில் ஈடுபடும் போது, அந்த கவசத்தை உடைத்து, நோன்பையும் முறித்து விடுகிறார்கள். அதன் நன்மைகளையும் இழந்து விடுகிறார்கள்.

"ஒரு மனிதர்நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது' என்று கேட்டார்?. 'பொய், புறம் பேசுவதினால்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்". "யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித் திருப்பது மட்டுமல்ல! தகாத காரியங்களில் இருந்து விலகி இருப்பதும் ஆகும். இத்தகைய நோன்பே கேடயமாக இருந்து நோன்பாளிகளை பாதுகாக்கிறது. நாமும் நமது நோன்பை சிறந்ததாக அமைத்துக்கொள்வோம்.

Tags:    

Similar News