வழிபாடு

புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-12)

Published On 2024-03-24 04:12 GMT   |   Update On 2024-03-24 04:12 GMT
  • ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை.
  • ஒரு மாத நோன்பு 10 மாதங்கள் நோன்பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.

ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை

இஸ்லாம் சிலகாலங்களுக்கும், சிலபுனித தலங்களுக்கும் அபரிமிதமான சில சிறப்புகளை கொடுத்து அழகு பார்க்கிறது. அந்த வகையில் அந்த புனித தலங்களில், அந்த காலங்களில் வணக்க வழிபாடு புரியும்போது மற்ற புனித தலங்களில், மற்ற காலங்களில் நிறைவேற்றப்படும் வணக்கத்திற்கு கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு நன்மைகள் வாரி வழங்கப்படுகிறது.

புனித இறையில்லம் கஅபாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறை இல்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஒரு லட்சம் மடங்கு சிறந்ததாகும்.

புனித மதீனாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறையில்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும்.

'நன்மையை நாடி மூன்று இறை இல்லங்களைத் தவிர வேறெங்கும் பயணம் மேற்கொள்ளப்படாது; அவை: புனித கஅபா, மஸ்ஜித்நபவீ எனும் எனது பள்ளி, மஸ்ஜித் அக்ஸா (பைத்துல் முகத்திஸ்) ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

புனித தலங்களுக்கு வழங்கிய அதே சிறப்பை இஸ்லாம் சில காலங்களுக்கும் வழங்கி கவுர வப்படுத்துகிறது. துல்ஹஜ் மாதம் முதல் பத்து தினங்கள் உலக நாட்களிலேயே சிறந்த நாட்களாக அமைகிறது. ஏனெனில் அந்த பத்து நாட்களிலும் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒருசேர நிறைவேற்றப்படுகின்றன.

இந்த பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் நல்லறம் எதுவாயினும் மற்ற மாதங்களில் நிறை வேற்றப்படும் நல்லறங்களை விட சிறந்ததாக அமைந்துவிடுகின்றன. இவ்வாறு இரண்டு பெருநாட்களும் சிறந்த நாட்களாக அமைகின்றன.

முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் குறிப்பாக அதில் வரும் 9,10 ஆகிய இருதினங்களும் வெற்றி தினங்களாகும். இதன் வரிசையில் ரமலான் மாதமும் இணைகிறது. ரமலானில் மூன்று பத்துகள் உண்டு. அவற்றில் சிறந்தது கடைசி பத்து தினங்களாகும்.

நபி (ஸல்) கூறியதாவது: 'ஆதமின் மகனு டைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மை கள் வழங்கப்படுகின்றன, நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரிய தாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன்.

அவன் எனக்காக தனது உணர்வையும், உண வையும் கைவிடுகிறான் என இறைவன் கூறுகின்றான்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

'ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம்) ரமலானில் ஒரு நோன்புக்கு பத்து மடங்கு கள் நன்மை வழங்கப்படுவதால் ஒரு மாதம் நோன்பு நோற்றதற்கு 10 மாதங்கள் நோன் பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.

அதைத்தொடர்ந்து பெருநாளை விட்டு விட்டு பிறகு வரும் ஆறு நாட்கள் நோன்பை தொடர்வதற்கும் 10 மடங்குகள் நன்மை வழங்கப்படும். 6 நாட்கள் நோன்பு நோன்பதற்கு இரண்டுமாத நோன்பின் நன்மை கிடைத்துவிடுகிறது. ஆக ரமலானிலும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உண்டு. எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு (நன்மை) உண்டு.' (திருக்குர்ஆன் 6:160)

Tags:    

Similar News