வழிபாடு

பிள்ளையார்பட்டியில் கோலாகல தேரோட்டம்

Published On 2023-09-19 04:43 GMT   |   Update On 2023-09-19 04:43 GMT
  • மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
  • தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பத்தூர்:

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் இரவு மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

நேற்று 9-ம் நாள் விழா ஆகும். விநாயகர் சதுர்த்தியும் என்பதால் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் விநாயகரை சந்தனக்காப்பு திருக்கோலத்தில் தரிசித்தனர்.

மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். அதன் பின்னர் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திடீரென மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். இதில் சண்டிகேசுவரர் தேரை முழுக்க முழுக்க பெண்களே இழுத்து வந்து தரிசித்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பிள்ளையார்பட்டிக்கு இயக்கப்பட்டன.

இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு மோதகம் (கொழுக்கட்டை) படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News