வழிபாடு

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

Published On 2023-10-16 05:18 GMT   |   Update On 2023-10-16 05:18 GMT
  • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
  • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags:    

Similar News