புயல் மழையால் திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி
- ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது.
- திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
திருப்பதி:
பெஞ்ஜல் புயல் காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. திருப்பதி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்தனர்.தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது.
மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சி அளித்தது.
திருப்பதியில் நேற்று 67,496 பேர் தரிசனம் செய்தனர். 19,064 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.