வழிபாடு

தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-05-01 02:15 GMT   |   Update On 2023-05-01 05:21 GMT
  • லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.
  • பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரைத் பெருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து கோவிலில் காலை, மாலை என இரு வேளைகளில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்களுடன் தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு, கோவில் வெளியே வந்து மேலவீதியில் உள்ள தேர்மண்டபம் வந்தடைந்தனர்.

அங்கு 3 அடுக்குகள் கொண்ட 19 அடி உயரம், 18 அடி அகலம், 40 டன் எடை கொண்ட தேரில் தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளினர். காலை 6.50 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'தியாகேசா, ஆரூரா' என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை முன்னே நடந்து செல்ல விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே சென்றது. பின்தொடர்ந்து தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் சென்றது. நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர் சப்பரங்கள் தேரை பின் தொடர்ந்தன. கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.

தேர் செல்லும் வழியில் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடியே சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர். மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜவீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மதியம் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது.

இன்று நடந்த தேரோட்டத்தை தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

தேரோட்டத்தையொட்டி 1000-க்கு மேற்ப்பட்ட போலீசார் ஈடுப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News