வழிபாடு

கொடி மரத்துக்கு பிரமாண்ட மாலைகளால் அலங்காரம் செய்த போது எடுத்த படம். ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள்

மதுரை கள்ளழகர் கோவிலில் 1-ந்தேதி ஆடி தேரோட்டம்

Published On 2023-07-25 03:48 GMT   |   Update On 2023-07-25 03:48 GMT
  • 2-ந்தேதி புஷ்ப சப்பரம் நடக்கிறது.
  • 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், வண்ணபூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.25 மணிக்கு ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

இதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனை நடந்தது. அப்போது கொடிக்கம்பம் அருகில் நின்ற சுந்தரவல்லி கோவில் யானை துதிக்கையை தூக்கி ஆசிர்வதித்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து இன்று(செவ்வாய்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

26-ந்தேதி இரவு அனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28-ந் தேதி காலையில் 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலையில் 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் விழா நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News