வழிபாடு

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முடிந்து ஊர் திரும்பினார் முருகப்பெருமான்

Published On 2024-04-25 03:50 GMT   |   Update On 2024-04-25 03:50 GMT
  • முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
  • பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.

திருப்பரங்குன்றம்:

மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.

இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.

இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

Tags:    

Similar News