ஆன்மிகம்

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவில் 6½ லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2018-10-20 05:34 GMT   |   Update On 2018-10-20 05:34 GMT
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாட்களில் 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நாட்களில் பக்தர்கள் 17 கோடியே 75 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடந்தது. விழாவில் தினமும் மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகன ஊர்வலத்தை தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி வலம் வந்த கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.

பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனையொட்டி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி, சக்கரத்தாழ்வார் உற்சவர்கள் கோவிலில் இருந்து மாடவீதிகள் வழியாக புஷ்கரணியை அடைந்தனர்.

அங்கு உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. திருமஞ்சனம் நிறைவடைந்ததும் சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் புஷ்கரணிக்கு எடுத்துச்சென்று வேதமந்திரங்கள் முழங்க 3 முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி எழுந்தனர். இதனையொட்டி புஷ்கரணி மற்றும் மாடவீதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக புஷ்கரணியில் நீச்சல் வீரர்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தனர். தீர்த்தவாரி முடிந்ததும் உற்சவர்கள் கோவிலுக்கு திரும்பினர். அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களிலும் மொத்தம் 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், கருடசேவை நடந்த அன்று மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் 29 லட்சத்து 30 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியிருந்ததோடு 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும், 6 கோடியே 70 லட்சம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டதாகவும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கருடசேவை தினத்தில் மட்டும் 1,000 போலீசார் கூடுதலாக ஈடுபட்டிருந்தனர்.

மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

பிரம்மோற்சவ நாட்களில் கல்யாண கட்டாவில் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு முடி இறக்கும் பணியில் ஆயிரத்து 270 ஆண் தொழிலாளர்களும், 270 பெண் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். இந்த நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 17 கோடியே 75 லட்சம் இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News