கோவில்கள்

ஆனந்த வாழ்வு தரும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில்

Update: 2022-09-22 07:20 GMT
  • ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது.
  • அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.

தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது. தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவள்ளித் தாயார் எழுந்தருளியுள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலின் வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை தரிசனத்துக்கு எழுத்தருள செய்யும் கிழக்கு நோக்கிய மண்டபம் உள்ளது. இக்கோவில் கருவறையில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் உள்ளார். இந்த மூலவருக்கு அருகே உற்சவர் ராஜகோபால பெருமாள், ருக்மணி-சத்யபாமாவுடன் அருள் பாலிக்கிறார்.

அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் எழுந்தருளி உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், 10 கரங்களையும் உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சி அளிக்கிறார். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக்கோவிலில் மட்டுமே உள்ளது.

அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து கடந்த 1978-ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய சாமி சிலைகள் கொள்ளை போனது. இந்த சிலைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்டு தற்போது இந்த கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். ஆனந்த வாழ்வு தரும் அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் தல வரலாறு மிகவும் பிரசித்தி பெற்றது.

இலங்கையில் யுத்தம் செய்து சீதையை மீட்டபின், புஷ்பக விமானத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் ஆயோத்திக்கு திரும்பினர். வழியில் அவர்கள் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்துண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர், ராமபிரானிடம், ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு உள்ளனர். அவர்களுள் இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிக கொடியவர்கள். அவர்கள் தற்போது கடலுக்கடியில் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவம் நிறைவேறினால் அவர்கள் ராவணனைப்போல பலம் பெற்றுவிடுவார்கள். எனவே உலக நன்மைக்காக அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்ற ராமபிரான், அரக்கர்களை அழிக்க மாவீரனான அனுமனை பணித்தார். அனுமனோ, அழியாவரம் பெற்றவர். அளவில்லா ஆற்றல் உடையவர். இருப்பினும் அரக்கர்களை அழிக்க திருமால் தன் சங்கு சக்கரத்தையும் அனுமனுக்கு அளித்தார். பிரம்மா, பிரம்ம கபாலத்தை அனுமனுக்கு வழங்கினார். ருத்ரன் மழுவையும், ராமபிரான் வில்- அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும் வழங்கினா்.

இவ்வாறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை தாங்கி அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார். அப்போது கருடாழ்வார் தன் இரு சிறகுகளையும் அவருக்கு தந்தார். கடைசியாக அங்கு வந்த சிவபெருமான், 10 கரங்களிலும் ஆயுதங்களுடன் நின்ற ஆஞ்சநேயரை கண்டு தான் என்ன தருவது என சிந்தித்து தனது 3-வது கண்ணை அனுமனுக்கு அளித்தார்.

3 கண்கள்(திரிநேத்ரம்), 10 கைகளுடன் வீர அனுமான் புறப்பட்டு சென்று கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்து கொண்டிருந்த இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரையும் சம்ஹாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமரை சந்திக்க வந்தார். வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பியுள்ள இடத்தை கண்ட அனுமன் ஆனந்த மிகுதியால் அங்கு தங்கினாா். அந்த இடமே அனந்தமங்கலமானது. இந்த கோவிலில் 6 கால பூஜை நடந்து வருகிறது. அமாவாசை தோறும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருவராதனங்களுடன் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செல்கின்றனர். மார்கழி மாதம் அமாவாசையின்போதும் சிறப்பு வழிபாடு மிகவும் பிரமாண்டமாக நடக்கிறது.

ஆஞ்சநேயர் வழிபாட்டின் பயன்கள்

* அனந்தமங்கலம் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமால், சிவபெருமான், பிரம்மன், ராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பயன் கிடைக்கும்.

* சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.

* ஆஞ்சநேயர் வழிபாட்டால் அறிவு கூர்மையாகும்.

* உடல் வலிமை பெருகி மன உறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய்கள் நீங்கும்.

* வாக்கு வன்மை வளமாகும்.

நவக்கிரக njhஷம் நீக்கும் ஆஞ்சநேயர்

அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வழிபடலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட காலங்களில் வழிபடும்போது அதிக பயனை பெறலாம். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

மாதந்தோறும் அமாவாசை திதியிலும் மூல நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபட்டு் பயன்பெறலாம். ராகுகாலம், அஷ்டமி திதி ஆகிய தீய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கி கொள்ளலாம். வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவை அனுமனுக்கு உகந்தவை ஆகும். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய் போல் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அனுமனுக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல், வடைமாலை ஆகிய பிரசாதங்களை நைவேத்யம் செய்தும் பக்தர்களுக்கு வழங்கியும் நலம் பெறலாம். ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளதால் அவரை வழிபட்டால் நவக்கிரகங்களால் பாதிப்புகள் ஏற்படாது. உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், ஊழ்வினையால் துன்பப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.

கோவிலுக்கு செல்வது எப்படி?

அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்க சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக திருக்கடையூருக்கு சென்று அங்கிருந்து அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். சென்னையில் இருந்து ரெயில் மூலம் வர வரும்பும் பக்தர்கள் சோழன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து அனந்தமங்கலத்துக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து பின்னர் அங்கிருந்து அனந்தமங்கலம் வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

Tags:    

Similar News