ஆன்மிகம்

திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர் தியாகராஜ சுவாமி கோவில்

Published On 2019-03-30 01:16 GMT   |   Update On 2019-03-30 01:16 GMT
திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.
1.4.2019 அன்று ஆழித் தேரோட்டம்

திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் தனது திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினை பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர்.

இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டி யவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந்தார். அங்கு சங்கிலி நாச்சியார், ஈசனுக்கு பூ கட்டி தொண்டாற்றிக் கொண்டிருந்தார்.

சுந்தரர் திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்காக வந்த போது, சங்கிலியிடம் காதல் வயப்பட்டார். தொடர்ந்து ஈசனிடம் சென்று, சங்கிலியிடம் தனக்காக சென்று பேசி, தனக்கும் சங்கிலிக்கும் மணம் செய்து வைக்கும்படி வேண்டினார்.

ஈசனும் அதற்கு ஒப்புக்கொண்டு சங்கிலி நாச்சியாரிடம் சென்று, சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். உடனே சங்கிலியார், “சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே நான் எப்படி அவரை மணக்க முடியும்?” என்று ஈசனிடம் கேட்டார்.

அதற்கு ஈசன், அவளை விட்டு சுந்தரர் பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சுந்தரரை மணக்க சங்கிலி நாச்சியார் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரிலேயே தங்கியிருந்து சிவதொண்டு செய்து வந்தனர். சில காலம் சென்றது.

திருவாரூரில் வசந்தவிழா விசேஷம் வந்தது. அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுந்தரருக்கு பிறந்தது. அதனால் சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர். வாக்குறுதியை மீறியதும் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பின் பல சிவத்தலங்களுக்குச் சென்று, பார்வை வேண்டிப் பதிகங்கள் பாடினார், சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால், திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோலை மட்டும் கொடுத்தார் ஈசன்.

அதைப் பெற்றுக்கொண்டு, தன் அடியார்களின் உதவியுடன் பல சிவதலங்களை தரிசிக்கச் சென்றார், சுந்தரர். ஒரு கட்டத்தில் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரை வணங்கினார். அங்கு ஏகாம்பரநாதரை உருகிப் பாடினார். இதில் மனம் மகிழ்ந்த ஈசன், சுந்தரருக்கு இடது கண் பார்வையை வழங்கினார். பின்னர் அங்கிருந்து இன்னும் சில சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்ட சுந்தரர், திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு ஈசனிடம் மன்றாடி வலது கண் பார்வையையும் பெற்றார்.

இந்த நிலையில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்தது பற்றிய தகவல் அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரை தன்னுடைய மாளிகைக்குள் விட மறுத்தார். சிவனடியார்கள் பலரும் சுந்தரருக்காக சமாதானம் பேசிப் பார்த்தும் பலனில்லை. மனம் நொந்து போன சுந்தரர், நேராக திருவாரூர் ஆலயம் சென்று தியாகேசப் பெருமானை சரணடைந்தார். தனக்காக பரவையாரிடம் தூது செல்லும்படி வேண்டினார். அதன்படியே திருவாரூர் ஆலய சிவாச்சாரியார் வேடத்தில் சென்று, பரவையாரிடம் சமாதானம் பேசினார் சிவபெருமான். அதற்கும் பரவையார் மனம் இரங்கவில்லை.

தூது சென்ற சிவபெருமானுக்காக இரவு நேரத்திலும் காத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அங்குவந்த ஈசன், “சுந்தரா! பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள்” என்றார்.

அதைக் கேட்ட சுந்தரர், “ஐயனே! தேவர்களைக் காக்க நஞ்சு உண்டீர்; மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தருளினீர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்' எனக்கூறி ஈசனின் திருப்பாதங்களில் பணிந்தார்.

அவரது பக்திக்கு இரங்கிய ஈசன், “சுந்தரா! உனக்காக இந்த நள்ளிரவிலும் மீண்டும் நாம் தூது செல்வோம். வருந்த வேண்டாம்” எனக்கூறினார். பின்னர் தன் சுய உருவத்துடனேயே பூத கணங்கள், தேவர்கள், முனிவர்கள் சூழ வீதியிலேயே நடந்து வந்து கொண்டிருந்தார். பரவை நாச்சியாரின் மாளிகை முன்புறம் திருக்கயிலைப் போல காட்சியளித்தது. சிவபெருமானைக் கண்ட பரவை நாச்சியார் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி நின்றார்.

ஈசன் பரவையாரிடம், “பரவையே! தோழன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பிய காரணத்தினால், மீண்டும் உன் முன் வந்தேன். உன்னுடைய இல்லத்திற்கு சுந்தரன் மீண்டும் வருதல் வேண்டும். அதுவே எம்முடைய விருப்பம்” என்றார்.

“பெருமானே! தங்கள் திருவடி நோக திருவாரூர் வீதியில் நடந்து வந்ததைக் கண்ட பிறகும் நான் இசையாது இருப்பேனோ! நாங்கள் கூடி வாழ்கிறோம்” என்று கூறினார், பரவை நாச்சியார். அவருக்கு அருளாசி கூறிய சிவபெருமான், சுந்தரரிடம் சென்று, “சுந்தரா! நீ உடனே உன் பரவையிடம் செல்வாயாக” என்று கூறிவிட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். முன்புபோல் சுந்தரரும் பரவையாரும் மீண்டும் ஒன்றிணைந்து சிவத்தொண்டுகள் புரியலாயினர்.

இப்படி சுந்தரருக்காக நள்ளிரவில் தம் திருப்பாதம் நோக, திருவாரூர் வீதிகளில் தூது சென்ற திருவாரூர் வீதிகளில் தான், திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும். ஆழித்தேர் என்று சொல்லப்படும் திருவாரூர் தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டது. உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித் தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி வழிபடுவார்கள். இப்படிச் செய்வதால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தேவாசிரியன் மண்டபம்

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் வெளிப் பிரகாரமான, பெரிய பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இது ‘தேவாசிரியன் மண்டபம்’ என அழைக்கப்படுகிறது. தியாகேசரை வணங்க வந்து கூடும் தேவாதி தேவர்கள், தமக்குரிய நேரம் வரும் வரை காத்திருக்கும் இடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது.

செல்வத் தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இந்த மண்டபத்தில் வந்துதான் மகாபிஷேகம் கண்டு, செங்கோல் செலுத்துவார். எனவே இந்த மண்டபத்தை ‘ராஜதானி மண்டபம்’ என்றும் அழைக்கிறார்கள். அந்த மண்டபத்தில் சிவனடியார்கள் வீற்றிருப்பார்கள்.

திருவாரூர் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து அங்கிருக்கும் அடியவர்களைப் பணிந்து வணங்கி அதன் பின்னரே, மூலவர் திருமூலட்டான நாதரையும், தியாகேசப் பெருமானையும் வழிபடுவது வழக்கம். சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்த காலங்களில் எல்லாம் தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து, அங்கிருக்கும் அடியவர்களை பணிந்து பின்னர் தம் தோழரான திருவாரூர் ஈசனை பணிவார்.

அமைவிடம்

கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 37 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் அமைந்துள்ளது. 
Tags:    

Similar News