கிரிக்கெட்

டாஸ் பரிதாபங்கள்- Practice-ல ஜெயிக்கிறேன், நிஜத்தில் தோற்கிறேன்: கெய்க்வாட் குமுறல்

Published On 2024-05-02 11:00 GMT   |   Update On 2024-05-02 11:00 GMT
  • காயம் காரணமாக தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே வெளியேறியது சிக்கலானது.
  • விக்கெட் கைப்பற்ற வேண்டிய தருணத்தில் 2 பவுலர்கள் மட்டுமே இருந்தனர்.

சென்னை:

ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே. அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்னே எடுக்க முடிந்தது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 24 பந்தில் 29 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், ரபடா, அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேர்ஸ்டோ 30 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ரூசோ 23 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் கிளீசன், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது தோல்வியை தழுவியது. இந்த தொடரில் சேப்பாக்கத்தில் 2-வது தோல்வி ஏற்பட்டது.

இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

நாங்கள் 50 முதல் 60 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் பேட்டிங் செய்த போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏற்றதாக இல்லை. மேலும் பனியும் இருந்தது. இதனால் ஆடுகளத்தின் தன்மை மாறியது.

பயிற்சியின் போது 'டாஸ்' போட்டு பழகுகிறேன். அதில் வெற்றி கிடைக்கிறது. ஆனால் களத்தில் டாசை இழந்து விடுகிறேன். இதனால் டாஸ் போட வரும் போது அழுத்தத்தில் உள்ளேன்.

கடந்த போட்டியில் இதே ஆடுகளத்தில் ஐதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆச்சரியமே. கடந்த 2 ஆட்டங்களில் ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது. 200 ரன்னுக்கு மேல் குவித்து எதிர் அணிக்கு சவால் கொடுத்தோம். இந்தப் போட்டியில் 180 ரன்கள் எடுப்பதே கடினமாக இருந்தது.

காயம் காரணமாக தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே வெளியேறியது சிக்கலானது. விக்கெட் கைப்பற்ற வேண்டிய தருணத்தில் 2 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். பனி பொழிவு காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவால் ஏற்பட்டது. இது கடினமானதுதான்.

எங்களுக்கு இன்னும் 4 ஆட்டம் இருக்கிறது. வெற்றி பாதைக்கு நாங்கள் திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். அவர் இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் 9 முறை டாசில் தோற்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை மீண்டும் சந்திக்கிறது. இந்தப் போட்டி வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) 3.30 மணிக்கு நடக்கிறது. சென்னை அணி 10 புள்ளியுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் அணி 8 புள்ளியுடன் 7-வது இடத்திலும் உள்ளன.

Tags:    

Similar News